பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/414

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



23. மக்களும் வாழ்க்கை முறையும்

மக்கள் தொகை

தென்னார்க்காடு மாவட்டத்தின் மக்கள் தொகை ஏறக்குறைய 28,00,000 (28 இலட்சம்) ஆகும். இதில் கெடிலம் ஓடும் கள்ளக்குறிச்சி வட்டத்தின் தொகை 3,83,500; திருக்கோவலூர் வட்டத்தின் தொகை 4,00,150; கடலூர் வட்டத்தின் தொகை 5,11,400 ஆகும். கெடிலம் ஓடும் மூன்று வட்டங்களின் மொத்த மக்கள் தொகை ஏறக்குறைய 13,00,000 (13 இலட்சம்) எனலாம். தமிழகத்தில் மக்கள் நெருக்கமுள்ள மாவட்டங்களுள் தென்னார்க்காடு மாவட்டமும் ஒன்று. இம்மாவட்டத்தின் எட்டு வட்டங்களுள் கெடிலம் ஓடும் மூன்று வட்டங்களின் மொத்த மக்கள் தொகை (13 இலட்சம்). இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகையில் (28 இலட்சத்தில்) ஏறத்தாழப் பாதி இருக்கிறது. இதிலிருந்து, கெடிலக்கரைப் பகுதியில் மக்கள் நெருக்கம் மிகுதி என அறியலாம்.

மற்றும் தென்னார்க்காடு மாவட்டத்தின் மொத்தப் பரப்பளவு 10,770 சதுர கி.மீ. ஆகும். இவற்றுள் கள்ளக்குறிச்சி வட்டத்தின் பரப்பளவு 2,230 சதுர கி.மீ. ஆகும்; திருக்கோவலூர் வட்டத்தின் பரப்பளவு 1,500 சதுர கி.மீ. ஆகும்; கடலூர் வட்டத்தின் பரப்பளவு 1,060 சதுர கி.மீ. ஆகும். ஆகக் கெடிலம் ஓடும் மூன்று வட்டங்களின் மொத்தப் பரப்பளவு 4,790 சதுர கி.மீ ஆகும். பரப்பளவு வகையில் பார்த்தாலும், கெடிலக்கரை வட்டங்களின் குறைந்த பரப்பளவில் நிறைந்த மக்கள் வாழ்வது புலனாகும். கெடிலக்கரை வட்டங்களுக்குள்ளும், 2,230 சதுர கி.மீ பரப்பளவுள்ள கள்ளக்குறிச்சி வட்டத்தில் 3,83,500 மக்களே வாழ்கின்றனர்; 1,500 சதுர கி.மீ. பரப்பளவுள்ள திருக்கோவலூர் வட்டத்திலோ 4,00,150 மக்கள் வாழ்கின்றனர். இவை யிரண்டினும் குறைந்த அளவான 1060 சதுர கி.மீ. பரப்பளவே உடைய கடலூர் வட்டத்தில், இவையிரண்டினும் மிக்க அளவில் 5,11,400 மக்கள் வாழ்கின்றனர்.

இன்னும் தெளிவாகச் சொல்லவேண்டுமானால், ஒரு சதுர கி.மீ. பரப்பளவில் 172 மக்கள் கள்ளக்குறிச்சி வட்டத்திலும், 267 மக்கள் திருக்கோவலூர் வட்டத்திலும், 483 மக்கள் கடலூர் வட்டத்திலும் வாழ்கின்றனர் எனலாம். இம்மூன்று