பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/435

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

434

கெடிலக்கரை நாகரிகம்


வியாழக்கிழமையில் ஒருவர் இறந்துவிடின், அடுத்த வியாழனுக்குள் ஊரில் இன்னும் இருவர் இறந்து விடுவர் என்ற நம்பிக்கையும் உண்டு. ‘தங்கு வியாழன் தனியோடு மூன்று’ என்பது முதுமொழி.

செத்தவர்களைத் தெய்வமாக மதித்து ஆண்டுதோறும் செத்த நாளில் நினைவு விழா (திவசம்) கொண்டாடுவது மரபு. கணவன் இருக்க மனைவி சுமங்கலி இறந்துவிடின், அவளுக்குப் ‘பூவாடைக்காரி’ எனப் பெயர் இட்டு ஆண்டுதோறும் தைத் திங்கள் இரண்டாம் நாள் மாட்டுப் பொங்கலில் புதுப் புடவை வைத்துப் படைத்து வழிபாடு செய்கின்றனர். செத்தவர்கள் எல்லாருமே தெய்வந்தான்! ‘செத்துத் தெய்வமாகப் போய்விட்டார்’ என்பது இந்தப் பக்கத்து வட்டார வழக்கு.

இந்தப் பகுதியில் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன், செத்தவர்களைக் கல்லால் கட்டிய சவக் குழிகளிலும், மண்பாண்டத் தாழிகளிலும் வைத்துப் புதைத்ததாகத் தெரிகிறது. இத்தகைய சவக்குழிகளும் முதுமக்கள் தாழிகளும் திருமுனைப்பாடி நாட்டில் சில இடங்களில் கிடைத்து வருகின்றன.

உணவு

இந்தப் பகுதியில் நெல், கம்பு, கேழ்வரகு இவற்றாலான உணவுகளையே பெரும்பாலும் மக்கள் உண்கின்றனர். வரகு, தினை, சோளம் ஆகியவற்றை ஒரு சிலரே ஒரு சில போதே பயன்படுத்துகின்றனர் - இது மிக மிகக் குறைவு. கால் நூற்றாண்டுக்கு முன்வரையும் இருந்த உணவு முறை வருமாறு:-

செல்வர்கள் பகல், இரவு இருவேளைகளிலும் நெல்லரிசிச் சோறு உண்பர்; காலையிலும் மாலையிலும் சிற்றுண்டி அருந்துவர். கற்றவர்களும் அரசு அலுவலாளர்களுங்கூட இப்படித்தான். இவர்கள் நண்பகலில்தான் மிடுக்கான உணவு உண்பர்; இரவு உணவு எளிமையாய் இருக்கும். ஏழையரும் தொழிலாளிகளும் கம்பு, கேழ்வரகு இவற்றாலான கூழ் குடிப்பர்; இரவில் மட்டுமே நெல்லரிசிச் சோறு உண்பர். செல்வர் சிலரும் பகலில் கூழும் இரவில் சோறும் உண்பர். ஏழையர் சிலர் இரு வேளைகளிலும் கூழ் குடிப்பதுண்டு. சிறுவர் காலையில் பழஞ்சோறு (பழையது) உண்பர்.

பகலில் கூழ் குடிப்பவர்களும் அமாவாசையில் மட்டும் பகலில் சோறு ஆக்கிப் படைத்து உண்பர். ‘அமாவாசை பருக்கை அன்றாடம் கிடைக்குமா?’ என்னும் பழமொழி