பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/444

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மக்களும் வாழ்க்கை முறையும்

443


இடுதல்’ என்று பெயராம். சில குடும்பங்களில் இந்தப் படையல் இராது. சில குடும்பத்தார் நடு வாசலில் பொங்கிப் படைக்காமல், வழக்கமான அடுப்பங்கரையிலேயே பொங்கிப் படைப்பர். இந்தப் படையல், மழை பெய்வதற்கும் உணவுப் பொருள்கள் விளைவதற்கும் காரணமாயுள்ள ஞாயிற்றுக்கு (சூரியனுக்கு) நன்றி செலுத்தும் முறையில் நடைபெறுவதாகும்.

பெரும் பொங்கலையடுத்துத் தைத்திங்கள் இரண்டாம் நாள் ‘மாட்டுப் பொங்கல் விழா’ நடைபெறும். இந்த நாளில் மக்கள் எண்ணெய் தேய்த்துக் குளிப்பர்; மாடுகளைக் குளிப்பாட்டி ஒப்பனை செய்து உணவு படைத்து மாலை வேளையில் ‘மஞ்சு விரட்டு’ நடத்துவர். இது ‘மாடுமிரட்டல்’ என்றும் சொல்லப்படும். வண்டி மாடுகளை வண்டிகளில் பூட்டி ஊரை வலம்வரச் செய்வர். அன்று முழுதும் மாடுகளை அடித்தலோ, வேலை வாங்குதலோ செய்யார். வீட்டிலும் - தெருவிலும் - ஊரிலும் ‘பொங்கலோ பொங்கல் - மாட்டுப் பொங்கலோ பொங்கல்’ என்று கூவும் முழக்கம் விண்ணைப் பிளக்கும். சிற்றுரர்களில் பொதுத் திடலில் இறையுருவம் கொண்டு வரப்படும். அதன் முன்னிலையில் ஊர் மாடுகள் கொண்டு வரப்பட்டு ‘மஞ்சு விரட்டு விழா’ நடைபெறும். வீடு முழுதும் கரைத்த அரிசி மாவினால் ‘மாக்கோலம்’ போட்டு அணி செய்வர். அன்றிரவு உணவுப் படையல் நடக்கும். புலால் உண்பவர் வீட்டில், நாட்டுக் கார்த்திகைப் படையல் - போகிப் படையல் போலவே சைவப் படையலும் காத்தவராயன் படையலும் இருக்கும். உணவு வகைகளுடன் புத்தாடைகளும் வைத்துப் படைக்கப்பட்டு உடுத்துக் கொள்ளப்படும். உழவர்கள் பொங்கல் படைத்த நீரைக் கொண்டுபோய் வயல்களிலுள்ள பயிர்களின்மேல் ‘பொங்கலோ பொங்கல்’ எனக் கூவித் தெளிப்பர். இதற்குப் ‘பொங்கல் கூறுதல்’ என்று பெயராம்.

காணும் பொங்கல் எனப்படுவது மூன்றாம்நாள் - கரிநாள் அன்று கொண்டாடப்பெறும். அன்று மக்கள் புத்தாடை உடுத்துப் புது ஒப்பனை செய்துகொண்டு ஒருவர் வீட்டுக்கு ஒருவர் சென்று கண்டு அளவளாவுவர். சிறியவர்கள் பெரியவர்களின் கால்களில் விழுந்து வணங்கி வாழ்த்து வேண்டுவர். பெரியோர் தாம்பூலம் அளித்து வாழ்த்துவர். தாம்பூலத்தில் தகுதிக்கேற்பப் பணமும் வைக்கப்படும். அன்று ஊரிலிருந்து பொங்கல் மருவுக்காகப் புதுமண மக்களாகிய மகளும் மாப்பிள்ளையும் வந்து சிறப்புகள் பெற்று விருந்துண்பர். அன்று எல்லா வகைத் தொழிலாளர்கட்கும் விடுமுறை நாள். இந்த விடுமுறை அவர்களாகவே விட்டுக்