பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/456

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மக்களும் வாழ்க்கை முறையும்

455


குறிப்பிடுவர். பாட்டியை ஆயா என அழைப்பர்; ஒரு சிலர் ஆயி என்பர். பாட்டனாரைத் தாத்தா என்பர். எவரையும் அத்தான் என அழைக்கும் பழக்கம் இங்கே கிடையாது தாயுடன் பிறந்தவரும் மாமன்தான்; தமக்கையின் கணவனும் மாமன்தான்; (பெண்ணுக்குத்) தன் கணவனும் (மாமன்தான்; அஃதாவது, அம்மான், அத்தான் முதலிய அனைவருமே மாமாதான்.

கணவன் - மனைவியை, ஆம்படையான், (அகமுடையான் பெண்டாட்டி) என்பர். ஆடவரை ஆம்பிளை (ஆண் பிள்ளை) என்பர்; பெண்டிரைப் பொம்பிளை (பெண் பிள்ளை), பொம்மனாட்டி, பொண்டுவங்க என்பர். இளம் பெண்ணைப் பாப்பா என்பர்; இளம் பிள்ளையைப் பிள்ளையாண்டான் என்பர். சிறுமியரை ‘வெடை’ என்று கேலியாகச் சொல்வதும் உண்டு. கணவன் மனைவியை ‘எங்க வீட்டிலே’ என்றும், மனைவி கணவனை வீட்டுக்காரர் என்றும், ‘எங்க ஆம்பிளை’ என்றும் குறிப்பிடுவர். மனைவி கணவனை ‘ஏன்னா’ என்றும், கணவன் மனைவியை ஏன் என்றும், ‘டேய்’ என்றும் அழைப்பதும், இருவருமே ஒருவரையொருவர் ‘அவுங்க இவுங்க’ எனக் குறிப்பதும் உண்டு. பொதுவாகப் பெரிய இடத்து ஆடவரை ஐயா, ஐயாமார் என்றும், பெண்டிரை அம்மா, அம்மாமார் என்றும் மற்றவர் அழைப்பர். சிறு பையனை இலே அல்லது எலே என்று அழைக்கும் பழக்கம் திருமுனைப்பாடி நாட்டில் இல்லை; டேய் அல்லது ‘டேய் தம்பி’ என்றே அழைப்பர். சிறுமியரைப் புள்ளே (பிள்ளை) ‘தோபுள்ளே’ என்று சில ஊர்களில் அழைக்கின்றனர். கணவன் மனைவியருள்ளும் சரி - மற்ற ஆண் பெண்களுள்ளும் சரி. ஒருவரை யொருவர் ‘தே’ என அழைத்துக் கொள்ளும் பழக்கம் ஒரு சிலரிடையே உண்டு.

சிறு குழந்தைகளைக் குழந்தை குட்டிகள் என்னும் பொருளில் ‘புள்ளை சாதிவோ’ (பிள்ளை சாதிகள்) என்பர் சிலர். ஆண் பிள்ளையை ‘ஆணாய்ப் பிறந்தது’ எனக் குறிப்பிடும் வழக்கம் அவ்வளவு மிகுதியாக இல்லாவிடினும், பெண் பிள்ளையைப் பொண்ணா பொறந்தது (பெண்ணாய்ப் பிறந்தது) என்று குறிப்பிடும் வழக்கம் மிகுதியாயிருக்கிறது. இங்கே, பையன்கள் என்னும் சொல் கொச்சையாகப் ‘பசங்கள்’ எனச் சொல்லப்படுகிறது. பசங்கள் என்றால் ஆண் சிறுவர்கள் என்றே மற்ற மாவட்டத்தார் எண்ணக்கூடும்; இங்கே ‘பொம்பளே பசங்கள்’ என்று பெண் சிறுமிகளையும் ‘பசங்கள்’ எனக் குறிப்பிடும் வழக்கம் உண்டு. இங்கே ‘பசங்கள்’ என்னும் சொல் பொதுவாகச் சிறுவர் சிறுமியரைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படுகிறது. குழந்தைகளைப் ‘பிள்ளை குட்டிகள்’