பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வரலாறு கண்ட திசைமாற்றம்

71


ஆண்டுகட்கு முன் - அஃதாவது பத்தாம் நூற்றாண்டில் அஃதாவது மணிவாசகர் காலத்தில் கெடிலம் திசைமாறி யிருக்கலாம் என்ற முடிவுக்குத் துணிந்து வரலாம்.

உலகில் ஆறுகள் ஆங்காங்கே - அவ்வப்போது திசைமாறுவது இயற்கையே யென்றாலும், கெடிலத்தின் இந்தத் திசை மாற்றம், வரலாற்று உண்மையினையும் இலக்கிய ஆட்சியினையும் மாற்றும் நிலையில் இருப்பதால், ஈண்டு இத்துணை விரிவாக ஆராய்ச்சி செய்யவேண்டியதாயிற்று. இல்லாவிடின், வரலாறும் இலக்கியமும் பொய்யாகி விடுமன்றோ ? வைகையாறு கூட, மதுரையில் இப்போது ஓடும் திசைக்கு எதிர்த்திசையில் ஒரு காலத்தில் ஓடியதாகச் சொல்லப் படுவதுண்டு. மற்றும், தென்னார்க்காடு மாவட்டத்தில், அருணந்தி சிவாசாரியார் தோன்றிய திருத்துறையூர் என்னும் ஊருக்கு வடக்கே இப்போது ஓடிக்கொண்டிருக்கும் தென் பெண்ணையாறு, சுந்தரமூர்த்திநாயனார் காலத்தில் திருத்துறையூருக்குத் தெற்கே ஓடியதாகப் பெரிய புராணத்திலிருந்து தெரிகிறது. திருத்துறையூருக்குத் தெற்கே திருவதிகை உள்ளது. சுந்தரர் திருத்துறையூரிலிருந்து புறப்பட்டுத் தென்பெண்ணை யாற்றைக் கடந்து திருவதிகையை அடைந்ததாகச் சேக்கிழார் பாடியுள்ளார். இதனை, பெரிய புராணம் தடுத்தாட்கொண்ட புராணப் பகுதியிலுள்ள

"திருத்துறையூர் தனைப்பணிந்து சிவபெருமான்
அமர்ந்தருளும்
பொருத்தமாம் இடம்பலவும் புக்கிறைஞ்சிப் பொற்புலியூர்
நிருத்தனார் திருக்கூத்துத் தொழுவதற்கு நினைவுற்று
வருத்தமிகு காதலினால் வழிக்கொள்வான்
மனங்கொண்டார் (81)
"மலைவளர்சந் தகில்பீலி மலர்பரப்பி மணிகொழிக்கும்
அலைதருதண் புனல் பெண்ணை யாறுகடந் தேறியபின்
நிலவு பசும் புரவிநெடுந் தேரிரவி மேல்கடலில்
செல அணையும் பொழுதணையத் திருவதிகைப்
புறத்தணைந்தார்" (82)

என்னும் பாடல்களால் அறியலாம். பாடல்களிலுள்ள திருத்துறையூர்தனைப் பணிந்து..... பெண்ணையாறு கடந்தேறிய பின் .... திருவதிகைப் புறத்தணைந்தார்’ என்னும் பகுதிகளை நோக்கின், திருத்துறையூருக்கும் அதற்குத் தெற்கேயுள்ள திருவதிகைக்கும் இடையே பெண்ணையாறு ஓடியமை