பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கெடிலத்தின் தொன்மை

95


திருவக்கரை என்னும் ஊர் ஒன்று உள்ளது. இது திருஞான சம்பந்தரின் தேவாரப் பாடல் பெற்ற திருப்பதி, இவ்வூரை யொட்டிச் சங்கராபரணி ஆற்றங்கரையில் பல கல் மரங்கள் படுத்துக் கிடப்பதை இன்றும் காணலாம். பார்ப்பதற்கு மரங்கள் போலவே இருக்கும். மரங்கள் போலவே என்றென்ன - மரங்களே! வேர்கள், பட்டைகள், பட்டைகளின் சுருக்கம், பெருங் கிளைகள், சிறு கிளைகள், காம்புகள், இலைகள், இலை நரம்புகள் முதலிய பல்வேறு உறுப்புக்கள் உட்பட அடிமரத்திலிருந்து நுனிமரம் வரையும் அப்படியே முழு மரத்தையும் ஒரு சேரக் காணலாம். ஆனால், அவ்வளவும் கல் பாய்ந்த மாற்றம்! கல்லோடு நமக்குத் தொடர்பு எவ்வளவோ அவ்வளவே இம்மரத்தோடும்! இப்படிக் கிடக்கும் மரங்கள் இரண்டல்ல - மூன்றல்ல! பற்பல - பலப்பல! நூற்றுக்கணக்கில் என்றுங் கூறலாம். ‘படுத்துறங்கும் கல் மரக்காடு’ என்று புனைந்துரைக்கலாம்.

இந்தக் காட்சியைக் கடந்த முப்பது ஆண்டுகளில் நான் பலமுறை பார்த்துச் சுவைத்திருக்கிறேன். ஆனால், ஆனந்த விகடன் 4-9-1966 இதழில் (பக்கம் 19) திரு. டி.எம். வீரராகவன் என்னும் பெரியார் எழுதியுள்ள ஒரு கட்டுரையைப் படித்தபோது ஒரு புதிய செய்தியைத் தெரிந்து கொண்டேன். அது வருமாறு:

“இங்கே கல் மரக்காடு எப்படி வந்தது தெரியுமா?

இந்த மரங்களைப் பார்த்த பூகர்ப்ப நிபுணர்கள் ‘ஓக்’ மரம் என்கிறார்கள். ஒவ்வொன்றும் பிரமாண்டமான நீளம் இருக்கிறது. இங்கிலாந்தில் பூகம்பம் ஏற்பட்டு, ஓக் மரங்கள் பூமியில் அமுங்கிப் போய், பின்னர், திருவக்கரையில் வெளி வந்திருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.”

இது ஆனந்த விகடன் கட்டுரைப் பகுதி, இதைப் படித்தபோது புராணங்களிலும் மாயாசாலக் கதைகளிலும் வரும் நிகழ்ச்சிகளைப் படிப்பதுபோன்ற உணர்வு ஏற்பட்டது. இதே மாதிரியில் ஓர் அணுகுண்டை ஆனந்த விகடன் 21-8-1966 இதழிலும் கண்ணுற்றேன். அந்த இதழில் (பக்கம் - 14) திரு. அமுநாரா என்பவர், ‘மரம் கல்லானது’ என்னும் தலைப்பில் படத்துடன் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அது, நான் பார்த்தறியாத புதிய செய்தி. அரியலூருக்கு அருகில் சாத்தனூர் என்னும் சிற்றூரில் ஓர் ஓடையின் குறுக்கே, 16 அடி நீளமும் 4 அடி சுற்றளவும் கொண்டு வேர்கள், கிளைகள் முதலிய உறுப்புக்களுடன் ஒரு பெரிய முழுக் கல் மரம் விழுந்து