பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கெடிலத்தின் தொன்மை

97


இறுகிவிட்டன. அம் மரங்களின் உயிர் அணுக்களினிடையே, மண்ணுக்குள் உள்ள சிலிகா (Silica) கரைசல் படிவு புகுந்து கல்போல் இறுக்கி விடுகின்றன. பின்னர் நாளடைவில் மேலேயுள்ள மண் பகுதி கரைந்து கரைந்து நீங்கிப் போக. உள்ளிருந்த கல்மரங்கள் வெளித்தோன்றிவிட்டன. இவ்வாறு கல்லாகிய மரங்கள் ஏறக்குறைய 16 கோடி (16,00,00,000) ஆண்டுகட்குமுன் தோன்றியிருக்க வேண்டும்.

இப்படியாக அறிஞர்கள் கூறியுள்ளனர். மரங்களைப் போலவே, மீன், தவளை முதலிய உயிரினங்களும் கல்லாக மாறுவதுண்டு. இது ஆங்கிலத்தில் ‘பாலியாந்தாலஜி’ (Paleontology) என அழைக்கப்படுகிறது. உயிரினங்களின் உடம்பிலுள்ள உயிர் அணுக்களுக்குள்ளே ‘கால்சியம் & கார்பனேட்’ (Calcium carbonate), சிலிகா கரைசல் படிவு (Silica Deposits) போன்றவை புகுந்து கல்லாக இறுக்கி விடுகின்றனவாம். இவ்வாறு கல்லாக மாறிய உயிரினங்கள் 45 கோடி (45,00,00,000) ஆண்டுகட்குமுன் தோன்றியிருக்கக் கூடுமாம். கடற்கரைப் பகுதிகளில் இது நடக்கக் கூடும்.

இந்தக் கருத்துக்களின் அடிப்படையில் ஆராயின், திருவக்கரையிலுள்ள கல்மரங்கள் இங்கிலாந்திலிருந்து வந்தவை எனக் கொள்ள வேண்டியதில்லை. மிகப் பழங்காலத்தில் தமிழ்நாட்டில் தோன்றி வளர்ந்த மரங்களே அவை. மேற்குப் பகுதியிலிருந்து ஆற்று வெள்ளத்தால் அவ்வப்போது அடித்துக் கொண்டு வரப்பட்டவையாக இருக்கலாம். அல்லது, திருவக்கரைக்குக் கிழக்கே 16 கி.மீ. தொலைவில் இப்போது இருக்கும் கடல், அந்தக் காலத்தில் திருவக்கரைப் பக்கமாக இருந்திருக்கலாம். கடற்பெருக்காலும் கரைப் பகுதியிலுள்ள மரங்கள் சாய்க்கப்பட்டு மண்ணுக்குள் மறைந்து இறுக்கம் பெற்றிருக்கலாம். பின்னர்க் கடல் சிறிது சிறிதாகக் கிழக்கே தள்ளிப்போய்விட்டிருக்கலாம். திருவக்கரை, அதை அடுத்துள்ள சேதராப்பட்டு முதலிய விடங்களில் மீன்போன்ற உயிரினங்கள் இறுகிக் கல்லாக மாறியுள்ள உருவங்களும் கிடைக்கின்றன. இதனால், அந்தப் பகுதி மிகப் பழங்காலத்தில் கடல் சார்ந்ததாயிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அரியலூருக்கு அருகில் சாத்தனூர் ஒடையில் காணப்படும் கல்மரம் பற்றியும் இது போன்ற கருத்துதான் சொல்லப்பட்டுள்ளது: அஃதாவது, இலட்சக்கணக்கான ஆண்டுகட்கு முன் அந்தப் பகுதி கடலாக இருந்தபோது அந்த மரம் வீழ்த்தப்பட்டு மண்ணுக்குள் மறைந்து இறுகியிருக்க வேண்டும் என்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கெ.7.