பக்கம்:கென்னடி வீர வரலாறு.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2



இளைய பிட் என்பவன் ஆங்கில வரலாற்றில் நிலையான இடம் பெற்ற பேரமைச்சன். அவன் தந்தையும் ஆங்கிலப் பேரரசில் தலைமை அமைச்சராகப் பணியாற்றி உயிர் துறந்தார். இளைய பிட் காலத்தில் ஆங்கிலப் பேரரசு பெரும் வல்லரசாக மாறியது. உலக மெங்கும் ஆங்கிலக் கொடி பட்டொளி வீசிப் பறந்தது. இவ்வெற்றிகளுக்கு இளைய பிட்டின் அரச தந்திரமே காரணம் என்று வரலாற்றாசிரியர்கள் பெருமையுடன் கூறுகின்றனர். ஆனால் இந்தப் பிட் ஆங்கிலப் பேரரசின் தலைமை அமைச்சனாகப் பதவியேற்ற பொழுது மிகவும் இளைஞனாக இருந்தான். அப்போது பாராளு மன்றத்தில் வீற்றிருந்த உறுப்பினர்கள் அவன் தோற்றத் தைப் பார்த்து, "இந்தச் சிறுவனா நாட்டை ஆளப்போகிறான்” என்று வியப்போடு பேசினர், அப்போது அவ்வுறுப்பினர்களைப் பார்த்து, "எனது தந்தையே இளமை உருவோடு உங்கள் கண்ணெதிரில் நிற்கிறார்” என்று இளைய பிட் அஞ்சாமையோடு பதிலிறுத்தான்.

ஜான் பிட்ஜெரால்டு கென்னடியை நினைக்கும்போது இளைய பிட் பாராளுமன்றத்தில் அஞ்சாமையோடு வெளியிட்ட கூற்றே நம் கண்முன் வந்து நிற்கிறது. கென்னடி அமெரிக்கத் தலைவராகப் பதவியேற்ற பொழுது பலர் வியப்பில் ஆழ்ந்தனர். இப்பெரும் அரசியல் சுமையைச் சுமக்க இவ்விளைஞனால் ஆகுமா? என்றனர். ஆனால் கென்னடி தலைமைப் பொறுப்பேற்ற சில திங்களுக்குள் தமது பேராற்றலை உலக அரசியல் அரங்கில் புலப்படுத்திக் காட்டிவிட்டார். குறிப்பாகச் சொல்லப் போனல் புரட்சிவீரர் வாஷிங்டனின் அஞ்சாமையையும், அப்ரகாம் லிங்கனின் அருளுள்ளத்தையும், ரூஸ்வெல்ட்டின் அரசியல் மேதையையும் ஒருங்கே பெற்று, இளமை முறுக்கோடு புறப்பட்ட அருந்தலைவர் கென்னடி என்று கூறினால் அது மிகையாகாது.

பேரிடியின் அஞ்சாமையும், காட்டாற்றின் வலிமையும் பெற்றுப் பாய்ந்து புறப்பட்ட புலிப் போத்து பாதி வழியில் வீழ்ந்து விட்டது. அதன் வீரவரலாற்றில் நுழைவோம்.