பக்கம்:கேரக்டர்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



113


எல்லாரும் வெளியே போங்க. விஸிடர்ங்க டயம் ஆறு வரைக்குந்தான்: வந்தா கவிக்கா பேசிட்டுப் போயிடணும். கண்டதெல்லாம் பேஷண்டுங்களுக்கு வாங்கிக் கொடுத்துக் கெடுக்கக்கூடாது. அந்த அம்மா கையிலே என்னாது, நல்லசாமி?"

"வேர்க்கடலை உருண்டேம்மா."

"கிரௌண்ட் நட் கேக்! இவங்களை உள்ளே விட்டதே தப்பு—டயட் பாஸ் இல்லாம இதெல்லாம் யாரு எடுத்துக் கிட்டு வரச்சொன்னது உங்களை— ஆவட்டும் சொல்றேன்—!"

நர்ஸ் நாகமணி, வார்டுக்குள் வருகிறாள் என்றாலே எல்லாருக்கும் பயந்தான். எல்லோரையும் விரட்டிக் கொண்டேயிருப்பாள் அவள்.

அவள் பேச்சுமட்டும் கடுமையாகத்தான் இருக்கும்.ரூல் என்றால் ரூல்தான். ரூலுக்கு விரோதமாக எதுவும் நடக்கக் கூடாது அவளுக்கு. அது நோயாளியாக இருந்தாலும் சரி; விசிடர்களாயிருந்தாலும் சரி, வார்டு பாயாசு இருந்தாலும் சரி, எல்லோரிடமும் ஒரே கண்டிப்புத்தான்.

"நர்ஸம்மா அப்படித்தான் பேசும். ஆனால் நல்ல மாதிரி" என்பான் வார்டு பாய்.

டூட்டிக்கு வரும்போது இருக்கும் அதட்டலும் உருட்டலும் டூடி முடிந்து வெளியே போகும்போது அடியோடு மாறி விடும். வேறு நர்ஸிடம் டூடியை ஒப்படைக்கும்போது அந்த நர்ஸை ஒவ்வொரு பெட்டாக அழைத்துக்கொண்டு போய் அந்தந்த கேஸுகளைப் பற்றிய விவரங்களைச் சொல்லிவிட்டுச் செல்வாள். அப்போது அவள் நோயாளிகளிடம் பேசுகிற மாதிரியே வேறு. எல்லோரிடமும் அன்பொழுகப் பேசுவாள். காலையில் நெருப்பு மாதிரி சீறிக்கொண்டிருந்தவளா இப்போது இப்படிப் பச்சை வாழைப்பட்டையாக மாறி விட்டாள் என்று அதிசயிக்கத் தோன்றும்.


கே.--5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேரக்டர்.pdf/113&oldid=1481092" இலிருந்து மீள்விக்கப்பட்டது