பக்கம்:கேரக்டர்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114

"என்ன ஸெவண்டீன்! நான் வரட்டுமா? நல்லா தூங்கணும்; மருந்து குடிக்கணும். இந்த நாகமணி வார்டுக்கு வர பேஷண்டுங்க நல்லபடியாத்தான் திரும்பிப் போவாங்க" என்று ஒவ்வொரு நோயாளியிடமும் பெருமையாகச் சொல்லி விட்டுப் போவாள். முதலில் விஸிடர்களிடம் கோபமாகப் பேசிவிட்டு அவர்கள் போகும்போது சந்தோஷமாக அனுப்புவாள். அவர்களோடு வரும் குழந்தைகளுக்கு ஆரஞ்சு, பிஸ்கெட் முதலிய தின்பண்டங்களைக் கொடுத்து, 'பாப்பா சாப்டு' என்று கொஞ்சி அனுப்புவாள். யாராவது அவளுக்கு இனாம் கொடுக்க முன் வந்தால் ரொம்பக் கோபம் வந்துடும் அவளுக்கு. "இந்த நாகமணி யார் கிட்டேயும் காசு வாங்கமாட்டா. அந்த வார்டு பாய்கிட்டே கொடுங்க பாவம், புள்ளைக்குட்டிக்காரன்" என்பாள்.

டூடி முடிந்து வேறு உடை மாற்றியதும் நர்ஸ் நாகமணியின் தோற்றமே அடியோடு மாறிவிடும்.

அவள் கறுப்புதான். ஆனால் நல்ல அழகி. நாகரிகமாகப் புடவையும் ஜாக்கெட்டும் அணிந்து முகத்தில் பவுடர் பூசிக்கொண்டு வெளியே கிளம்பிவிடுவாள்.

மூர்மார்க்கெட்டின் உள் வட்டத்தை ஒரு 'ரவுண்டு' சுற்றிவிட்டு இங்கிலீஷ் சினிமா ஏதாவது ஒன்று பார்த்துவிட்டுத்தான் க்வார்ட்டர்ஸுக்குத் திரும்புவாள்.

ஞாயிற்றுக்கிழமைகளில் காலையில் சர்ச்! பகலில் தூக்கம்! மாலையில் சினிமா! மறுபடியும் டூடி! இதுதான் நாகமணியின் வாழ்க்கை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேரக்டர்.pdf/114&oldid=1481094" இலிருந்து மீள்விக்கப்பட்டது