பக்கம்:கேரக்டர்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



49

'சரி; போகலாம்'னாங்க. யாருடான்னு விசாரிச்சா புரொகிபிஷன் செக்கிங் போலீஸ் மப்டியிலே வந்திருக்கோம்னு சொல்றாங்க" என்பான்.

கடைசியில் ஒன்றுமே நடந்திருக்காது. அவ்வளவும் கனவிலே கண்டிருப்பான். காலையிலே பத்திரிகைகளில் வரும் அக்கப்போர்களையெல்லாம் ஒன்றுவிடாமல் படித்துவிட்டு அவற்றுக்குக் காது மூக்கு வைத்துப் பயங்கரமாகச் சிருஷ்டித்து நாலுபேரிடத்தில் சொல்லாவிட்டால் அவனுக்கு நிம்மதி ஏற்படாது.

யாராவது ரோடிலே ஒரு நாலணாவைத் தொலைத்து விட்டிருப்பார். அந்தச் செய்தி சொக்கப்பனின் காதுக்கு எட்டும். அவ்வளவுதான்; சொக்கப்பன் தனக்குத் தெரிந்தவர்கள் வீட்டுக்கெல்லாம் போய், "சார் துரைசாமி இன்னிக்கு நடு ரோடிலே நாலாயிரம் ரூபாயைத் தொலைச்சுட்டான். சார்!" என்பான். அதே செய்தியை அடுத்தவரிடம் போய்ச் சொல்லும்போது நாற்பதாயிரம் என்பான். அதற்கடுத்தவரிடம் போகும்போது அதுவே நாலு லட்சமாகிவிடும்!

உலகமே பிரளயத்தில் மூழ்கிவிடப் போவதாகப் போன வருஷம் ஒரு பெரிய வதந்தி அடிப்பட்டுக் கொண்டிருந்ததல்லவா? அந்த வதந்தியை அத்தனை பயங்கரமாகப் பரப்பியவனே அக்கப்போர் சொக்கப்பனாய்த்தான் இருக்க வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேரக்டர்.pdf/49&oldid=1479356" இலிருந்து மீள்விக்கப்பட்டது