பக்கம்:கேரக்டர்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

"திடீர்னு? இப்போ, இருக்கிற குளத்திலேயெல்லாம் இறங்கி அங்கே இருக்கும் பாசியெல்லாம் வாரி வாரிச் சேகரம் பண்ணிண்டிருக்குது.

"இது எதுக்குடான்னு கேட்டேன். இது ஒர் ஆராய்ச்சி மாமா! குளத்துப் பாசியைக் கொண்டுவந்து ஒரு தொட்டியிலே கொட்டி மூடிவைத்தால், அதிலே பூஞ்சக்காளான் பூத்து வருமாம். அதை வைத்துக்கொண்டு பெனிஸிலின் மாதிரி ஒரு பாசிலின் மருந்து கண்டுபிடிக்கப் போறானாம். கான்ஸருக்கு இது கைகண்ட ஒளஷதமாம். இதுமட்டும் ஸக்ஸஸ் ஆயிடுத்துன்னா அவ்வளவுதான். இந்தியாவுக்கு வெளிநாட்டிலெல்லாம் ஒரே புகழ்தானாம்! பாசிலின் கண்டு பிடிச்ச ஆர்.வி. ராமனுக்கு பாரத ரத்னம் பட்டங்கூடக் கிடைக்குமாம்.

"ஜவ்வாது மலைக்குப்போய் அங்குள்ள வாசனையெல்லாம் திரட்டி அதை மாத்திரைகளாக உருட்டிண்டு வரப்போறானாம். அணுப்பிரமாணம் உள்ள அந்த மாத்திரையைச் சாக்கடையிலே போட்டால் சாக்கடை நாற்றமெல்லாம் அப்படியே பறந்து போய்விடுமாம். சாக்கடைத் தண்ணியும் ஸ்படிகம் மாதிரி சுத்தமாயிடுமாம். அதைக் கண்டு பிடிச்சுட்டால் எருமை மாடுகளெல்லாம் இறங்கிக் குளிக்கறதுக்குச் சாக்கடைத் தண்ணி இல்லாமல் போயிடுமேன்னுதான் யோசிக்கிறானாம்! இதன் ஆராய்ச்சியிலே தீயை வைக்க!"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேரக்டர்.pdf/54&oldid=1479361" இலிருந்து மீள்விக்கப்பட்டது