பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

148

தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையின் அமைச்சர் அரிசில்கிழார் என்னும் புலவர். சிறந்த புலவரா இருந்த இவர் இவ்வரசன்மேல் 8-ஆம் பத்துப் பாடினார். இச்செய்திகளை 8-ஆம் பத்துப் பதிகத்தினாலும் அதன் அடிக் குறிப்பினாலும் அறிகிறோம். இப்புலவரின் செய்யுட்கள் சில தகடூர் யாத்திரை என்னும் நூலில் காணப்படுகின்றன.

இளஞ்சேரல் இரும்பொறைக்கு அமைச்சராக இருந்தவர் மையூர்கிழான் என்பவர். இவர் இவ்வரசனுடைய தாய்மாமன் ஆவர்.

தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை தன்னுடைய வயது சென்ற அரண்மனைப் புரோகிதனைத் தவஞ் செய்யக் காட்டுக்கு அனுப்பினான்.[1] இளஞ்சேரலிரும் பொறை தன்னுடைய அமைச்சனான மையூர்கிழானைத் தன்னுடைய புரோகிதனைக் காட்டிலும் அறநெறியுடையவனாகச் செய்தான்.[2]

பெருஞ்சேரல் இரும்பொறையின் மறவன் (சேனைத் தலைவன்) பிட்டங்கொற்றன்.[3] அரசன் பகையரசர்மேல் போருக்குச் சென்றால், அவன் கீழடங்கிய சிற்றரசர்கள் தங்களுடைய சேனைகளை அழைத்துக் கொண்டு அவனுக்கு உதவியாகச் சென்றனர்.


  1. (முழுதுணர்ந்து ஒழுகும் நரைமூதாளனை உண்மையும் மாண்பும் வளனும் எச்சமும், தெய்வமும் யாவதும் தவமுடை யோர்க்கென, வேறுபடு நனந்தலைப் பெயரக், கூறினே பெருமநின் படிமையானே,) (8-ஆம் பத்து 4:24-28)
  2. (‘மெய்யூர் அமைச்சியல் மையூர் கிழானைப் புரையறு கேள்விப் புரோசுமயக்கி’ (9-ஆம் பத்து பதிகம் அடி 11-12) புரோசு-புரோகிதன்.
  3. (புறம்-172:8-10; அகம் 77:-16,143:10-12)