பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கொங்கு நாட்டுச் சமய நிலை

ஏனைய தமிழ் நாடுகளில் இருந்தது போலவே கொங்கு நாட்டிலும் அக்காலத்தில் சிவன், திருமால், முருகன் கொற்றவை முதலிய தெய்வ வழிபாடுகள் நடந்தன. முருகன் வழிபாடு அக்காலத்தில் சிறப்பாக இருந்தது. குன்றுகளிலும் மலைகளிலும் முருகனுக்குக் கோயில்கள் இருந்தன. கொங்கு நாட்டுத் திருச்செங்கோடுமலை அக்காலத்தில் முருகன் கோயிலுக்குப் பேர் பெற்றிருந்தது. திருமால் (மாயோன்) வழிபாடும் இருந்தது. செல்வக் கடுங்கோ வாழியாதன் மாயவண்ணனாகிய திருமாலை வழிபட்டான். அவன் திருமால் கோயிலுக்கு ஒகந்தூர் என்னும் ஊரைத் தானங் கொடுத்தான்.[1] ஆயர்கள் திருமாலைக் கண்ணன் உருவில் வழிபட்டனர்.

வெற்றிக் கடவுளாகிய கொற்றவை வீரர்களின் தெய்வம். அயிரை மலைக் கொற்றவையைச் சேர அரசர், தங்களுடைய குல தெய்வமாக வணங்கினார்கள். கொங்கு நாட்டுக்கும் சேர நாட்டுக்கும் இடையில் இருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அயிரை மலையில் கொற்றவைக்குக் கோயில் இருந்தது. அயிரை மலைக் கொற்றவையைச் சேர அரசரும் கொங்குக் சேரரும் குல தெய்வமாக வழிபட்டார்கள்.


  1. (“மாயவண்ணனை மனனுறப் பெற்று அவற்கு, ஒத்திர நெல்லின் ஒகந்தூர் ஈத்து” (7-ஆம் பத்து, பதிகம்)