பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

151


பூதம் என்னும் தெய்வ வழிபாடும் கொங்கு நாட்டில் அக்காலத்தில் இருந்தது. கொங்கு நாட்டின் தலைநகரமான வஞ்சிக் கருவூரில் இளஞ்சேரல் இரும்பொறை பூதங்களுக்குக் கோயில் கட்டித் திருவிழா செய்தான்.[1] சிலப்பதிகாரம் நடுகற் காதையிலும் இச்செய்தி கூறப்படுகிறது.[2]

தமிழ்நாட்டின் வேறு ஊர்களிலும் பூத வழிபாடு அக்காலத்தில் இருந்தது. காவிரி பூம்பட்டினத்தின் நடுவிலே' பட்டினப் பாக்கத்துக்கும் மருவூர்ப் பாக்கத்துக்கும் மத்தியில் இருந்த நாளங்காடித் தோட்டத்தில் பூதசதுக்கம் என்னும் இடத்தில் பூதத்துக்குப் பேர்போன கோயில் இருந்தது. அது நகரத்தின் காவல் தெய்வம். (சிலம்பு-5 : 65-67) சிலப்பதிகாரம் இந்திரவூரெடுத்த காதை பில் அவ்வூரார் இந்தப் பூதத்தை வணங்கின சிறப்பு கூறப்படுகிறது. (அடி 59-88)

பூதம் என்றால் இந்தக் காலத்தில் துர்த் தேவதை என்றும் இழிந்தவர் வழிபடப்படும் சிறுதெய்வம் என்றும் கருதப்படுகிறது. ஆனால், சங்க காலத்திலும் அதற்கு பிற்பட்ட காலத்திலும் பூதம் என்றால் சிறந்த தெய்வமாகக் கருதப்பட்டது. அக்காலத்தில் மனிதருக்குப் பூதத்தின் பெயர் சூட்டப்பட்டது. சங்கப் புலவர் சிலர் பூதன் என்னும் பெயர் கொண்டிருந்ததைக் காண்கிறோம். இளம்பூதனார், ஈழத்துப் பூதன் தேவனார், கரும்பிள்ளை பூதனார், கருவூர்ப் பெருஞ் சதுக்கத்துப் பூதனார், காவன் முல்லைப் பூதனார், காவிரிப்பூம் பட்டனத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார், குன்றம்


  1. *அருந்திறல் மரபில் பெருஞ் சதுக்கமர்ந்த, வெந்திறல் பூதரைத் தந்திவண் நிறீஇ, ஆய்ந்த மரபில் சாந்தி வேட்டு மன்னுயிர் காத்த மறுவில் செங்கோல், இன்னிசைமுரசின் இளஞ்சேரல் இரும்பொறை (9-ஆம் பத்து, பதிகம்)
  2. **சதுக்கப் பூதரை வஞ்சியுள் தந்து, மதுக்கொள் வேள்வி வேட்டோன். (நடுகற்காதை 147-148)