பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

152


பூதனார், கோடை பாடிய பெரும்பூதனார், சேந்தம் பூதனார், மருங்கூர்பாகை சேந்தன் பூதனார், பூதபாண்டியன், வெண் பூதனார் முதலியோர் பூதன் என்னும் பெயர் பெற்றிருந்ததை அறிகிறோம். பிற்காலத்திலே பூதத்தாழ்வார் என்று பெயர் பெற்ற வைணவ பக்தர் இருந்தார்.

பூதம் என்னும் தெய்வ வழிபாடு பிற்காலத்தில் மறைந்து போயிற்று. சங்க காலத்தில் தமிழ் நாடாக இருந்த துளு நாட்டிலும், அக்காலம் முதல் இக்காலம் வரையில் பூத வழிபாடு நடந்து வருகிறது அங்குள்ள பூதக் கோயில்களுக்குப் பூததான என்று இக்காலத்தில் பெயர் கூறப்படுகிறது. (பூததான-பூதஸ்தானம்) துளுநாட்டுப் பூததானக் கோவில்களில் பூதத்தின் உருவம் இல்லை. அத்தெய்வத்தின் ஊர்திகளான புலி, பன்றி, மாடு முதலியவற்றின் உருவங்கள் வைக்கப்பட்டுள்ளன. சில பூததானங்களில் வாள் இருப்பதும் உண்டு, பூசாரி தெய்வம் ஏறி மருள் கொண்டு ஆடும் போது அந்த வாளைக் கையில் ஏந்தி ஆடுவார். பூதங்களின்மேல் பாடதான என்னும் பாட்டு (துளுமொழியில்) பாடப்படுகிறது. பாடதான என்பதற்கு பிரார்த்தனைப் பாட்டு என்பது பொருள். துளுவ மொழி திராவிட இனத்து மொழி. அம்மொழியில் சிதைந்துபோன பல தமிழ்ச் சொற்கள் இன்றும் வழங்கி வருகின்றன. துளுமொழியில் உள்ள பாடதானத்தைப்பற்றி 'இந்திய பழமை' என்னும் ஆங்கில வெளியீட்டில் காண்க.[1] துளு நாட்டிலும் இப்போது பூத வணக்கம் மறைந்து வருகிறது.

சங்க காலத்தில் கொங்கு நாட்டிலே வழிபடப்பட்டு வந்த பூதத் தெய்வ வணக்கம் பிற்காலத்தில் மறைந்து போயிற்று.


  1. * (Indian Antiquary xxiii. P. 19)