பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

169

முதலிய மேலைத் தேசத்தவர்க்கு முக்கியமான உணவுப் பண்டமாக இருந்த படியால் மிளகு வாணிகம் முதன்மை பெற்று இருந்தது. யவனர் மிளகை விரும்பி அதிகமாக வாங்கிக் கொண்டுபோன காரணத்தினாலே சமஸ்கிருத மொழியில் மிளகுக்கு ‘யவனப்பிரியா’ என்று பெயர் கூறப்பட்டது.

அந்தக் காலத்தில்தான் கொங்கு நாட்டுக்கும் யவன நாட்டுக்கும் வாணிகத் தொடர்பு எற்பட்டது. கொங்கு நாட்டிலே சிற்சில சமயங்களில் கதிர் மணிகள் உழவர்களுக்குக் கிடைத்தன என்று பழஞ் செய்யுள்களிலிருந்து அறிகிறோம். கொங்கு நாட்டின் வடக்கிலிருந்த புன்னாட்டில் நீலக் கல் சுரங்கம் இருந்தது என்று பிளினி என்னும் யவனர் எழுதியிருக்கிறார்.[1] படியூரிலும் இந்தக் கதிர்மணிகள் கிடைத்தன. (சேலம் மாவட்டத்துப் படியூர்.) கோயம்புத்தூர் மாவட்டத்து வாணியம் பாடியிலும் நீலக்கற்கள் கிடைத்தன. அந்தக் காலத்தில் இந்த நீலக் கற்கள் உலகத்திலே வேறு எங்கேயும் கிடைக்கவில்லை. கொங்கு நாட்டில் மணிகள் கிடைத்ததைக் கபிலர் கூறுகிறார்.[2] அரிசில் கிழாரும் இதைக் கூறுகிறார்.[3] யவனர் இங்கு வந்து இவற்றை வாங்கிக்கொண்டு போனார்கள். உரோம சாம்ராச்சியத்திலிருந்த சீமாட்டிகள் இந்தக் கற்களைப் பெரிதும் விரும்பினார்கள். உரோம சாம்ராச்சியத்தில் இந்த நீலக் கற்கள் ஆக்வா மரினா என்று பெயர் பெற்றிருந்தது. யவன


  1. * Pliny. Nat. Hist. BK. xxxvii. cap. v.
  2. ** (' இலங்கு கதிர்த்திருமணி பெறூஉம், அகன்கண் வைப் பின் நாடு', 7-ஆம் பத்து 6-19-20)
  3. (**கருவிவானந் தண்டளி சொரிந்தெனப், பல்விதையுழவர் சில்லேறாளர், பனித்துறைப் பகன்றைப் பாங்குடைத் தெரியல், கழுவுறு கலிங்கங்கடுப்பச்சூடி, இலங்குகதிர்த் திருமணி பெறூஉம், அகன் கண் வைப்பின் நாடு” 8ஆம் பத்து 6:10-15) (Aqua marina.) கொ-11