பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

171

காசுகளும் இருந்தன. 1931-ஆம் ஆண்டில் கிடைத்த புதையலில் 121 காசுகள் இருந்தன. இவற்றில் 23 நாணயங்களில் முத்திரையில்லாமல் வெறுங்காசாக இருந்தன. முத்திரையிடுவதற்கு முன்பு அவசரமாக இவை தங்கசாலையிலிருந்து அனுப்பப்பட்டன என்று தெரிகிறது.

கரூர்

(கோயம்புத்தூர் மாவட்டம்) இங்கு 1800-ஆம் ஆண்டில் உரோம தேசத்துப் பொற்காசு ஒன்று கிடைத்தது, 1806-ஆம் ஆண்டிலும் இன்னொரு பொற்காசு கிடைத்தது. 1888-ஆம் ஆண்டில் 500 வெள்ளிக் காசுகள் உள்ள புதையல் கண்டெடுக்கப்பட்டது. இவற்றில் 117 காசுகள் தேய்மானமில்லாமல் புதியவையாக இருந்தன. இவை ஒவ்வொன்றும் 376 கிராம் எடையுள்ளவை.

கலயமுத்தூர்

(பழனிக்கு மேற்கே ஆறு கல் தொலைவில் உள்ளது.) இவ்வூரில் 1856-ஆம் ஆண்டில் உரோம தேசத்துப் பழங்காசுகள் கிடைத்தன.

இவையில்லாமல், ஏறக்குறைய 1000 வெள்ளிக் காசுகளைக் கொண்ட உரோமாபுரி நாணயங்கள் ஒரு பெரிய மட்பாண்டத்தில் அகந்தெடுக்கப்பட்டது. இவை மதராஸ் படியில் ஐந்து, ஆறுபடி கொண்ட நாணயங்கள். இக்காசுகள் உருக்கிவிடப்பட்டனவாம். இவை கொங்கு நாட்டில் கிடைத்தவை. இடம் குறிப்பிடப்படவில்லை. போரில் இறந்த வீரர்களுக்கு நடுகல் நடுவதும், இறந்தவரைத் தாழியில் இட்டுப் புதைப்பதும் சங்க காலத்து வழக்கம். அவ்வாறு புதைக்கப்பட்ட ஒரு பண்டவர் குறியில் (கொங்கு நாட்டில்) ஒரு உரோம தேசத்து வெள்ளிக் காசு கண்டெடுக்கப்பட்டது. (1817)[1]*


  1. (*M. J. L. S. xiii. P. 214)1