பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

188

கருவூர்க் கலிங்கத்தார்

கலிங்க நாட்டில் (ஒரிசா தேசம்) சென்று நெடுங்காலத் தங்கியிருந்து மீண்டும் கருவூருக்கு வந்து வாழ்ந்திருந்தவர் இவர் என்பது இவருடைய பெயரிலிருந்து அறிகிறோம். (கி. மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்தே தமிழ் வாணிகர் கலிங்க நாட்டிற்குச் சென்று அங்கு வாணிகம் செய்து வந்தனர் என்பதை கலிங்க நாட்டில் காரவேலன் என்னும் அரசன் ஹத்திகும்பா குகையில் எழுதியுள்ள சாசனத்திலிருந்து அறிகிறோம்.) கி. பி. இரண்டாம் நூற்றாண்டிலிருந்த இவர் வாணிகத்தின் பொருட்டுக் கலிங்க நாடு சென்றிருந்தார் போலும். பாலைத் திணையைப் பாடிய இவருடைய செய்யுள் ஒன்று அகம் 183-ஆம் செய்யுளாகத் தொகுக்கப்பட்டிருக்கிறது.

கருவூர் கிழார்

இவர் இருந்த ஊரின் பெயரே இவருடைய பெயராக அமைந்திருக்கிறது. இவரைப் பற்றிய வரலாறு தெரியவில்லை. இவர் இயற்றிய செய்யுள் ஒன்று குறுந்தொகையில் 170-ஆம் செய்யுள்ளாகத் தொகுக்கப்பட்டிருக்கிறது.

கருவூர்க் கோசனார்

கோசர் என்பது ஒரு இனத்தவரின் பெயர். சங்க காலத்தில் கோசர், போர் வீரர்களாகவும் அரச ஊழியர்களாகவும் தமிழகமெங்கும் பரவியிருந்தார்கள். கொங்கு நாட்டில் இருந்த கொங்கிளங் கோசர், சேரன் செங்குட்டுவன் பத்தினித் தெய்வத்துக்கு விழா செய்தது போலவே, இவர்களும் கொங்கு நாட்டில் பத்தினித் தெய்வத்துக்கு விழா செய்தார்கள் என்று சிலப்பதிகாரத்தினால் அறிகிறோம். கோயம்புத்தூர் என்பது கோசர் (கோசர்-கோயர்) என்னும் பெயரினால் ஏற்பட்ட பெயர். கோசர் இனத்தைச்