பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

கூறுகின்றார். இக் கருவூர் உள்நாட்டில் இருந்ததென்று கூறுகிறபடியால், கடற்கரைக்கு அருகில் இருந்த சேரநாட்டுக் கருவூர் அன்று என்பதும், கொங்கு நாட்டுக் கருவூரைக் குறிக்கின்றது என்றும் தெரிகின்றன. மேலும் இக் கருவூரில் உரோம் தேசத்துப் பழங்காசுகள் கிடைத்திருப்பது இவ்வூரில் யவன வாணிகத் தொடர்பு இருந்ததைத் தெரிவிக்கின்றது.

சங்க காலத்தின் இறுதியில் கி. பி. முதல் நூற்றாண்டின் தொடக்கத்தில் இரண்டு கருவூர்கள் இருந்தன. ஒன்று மேற்குக் கடற்கரையில் சேரரின் தலை நகரமாக இருந்த கருவூர். இன்னொன்று கொங்கு நாட்டில் இருந்த இந்தக் கருவூர், இவ்விரண்டு கருவூருக்கும் வஞ்சி என்று வேறு பெயரும் உண்டு. இரண்டு கருவூர்களையும் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. இரண்டு கருவூர்கள் இருந்ததையறியாமல், ஒரே கருவூர் இருந்ததாகக் கருதிக் கொண்டு, சேரர் தலைநகரமாகிய கருவூர் வஞ்சி, சேர நாட்டிலிருந்ததா கொங்கு நாட்டிலிருந்ததா, என்று சென்ற தலைமுறையில் அறிஞர்களுக்குள் வாதப்பிரதிவாதங்கள் நடந்தன. இதுபற்றிக் கட்டுரைகளும் நூல்களும் இரு தரத்தாராலும் எழுதப்பட்டன. ஒரே காலத்தில் இரண்டு (கருவூர்) வஞ்சி மாநகர்கள் சேர நாட்டிலும் கொங்கு நாட்டிலும் இருந்தன என்பதை அறியாதபடியால் இந்த ஆராய்ச்சி நடந்தது. கொங்கு நாட்டையாண்ட சேர அரசர் காலத்திலும் அதற்குப் பிற்பட்ட காலங்களிலும் கருவூர் கொங்கு நாட்டின் தலைநகரமாக இருந்தது. இது ஒரு பெரிய வாணிக நகரமாகவும் இருந்தது. சங்கப் புலவர்களில் சிலர் இவ்வூரினராவர்.

கண்டிரம்

இப்பெயரையுடைய ஊர் கொங்கு நாட்டிலிருந்தது. அது எந்த இடத்திலிருந்தது என்பது தெரியவில்லை. கண்டிர நாட்டில் பெரிய மலையொன்று தோட்டி மலை என்று பெயர்