பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

இவ்வாறு இவர் நன்றாக ஆராயாமலும் விஷயத்தைச் சரியாகத் தெரிந்து கொள்ளாமலும் எழுதுகின்றார். முதலில் இவர் மேற்கோள் காட்டுகிற அகம் 294-ம் செய்யுளில் துளு நாட்டைப் பற்றியோ எருமை நாட்டைப் பற்றியோ ஒன்றும் இல்லை. இவர் குறிப்பிட விரும்புவது அகம் 15-ஆம் செய்யுள் என்று தோன்றுகிறது. இந்தச் செய்யுளில் துளுநாடு குறிப்பிடப்படுகிறது. கர்நாடக தேசத்தின் (கன்னட தேசத்தின்) பழைய ஊர்ப்பெயர்களைச் சங்க நூல்கள் கூறவில்லை என்று இவர் சுட்டிக்காட்டுகிறார். சங்கப் புலவர்கள் சந்தர்ப்பம் நேர்ந்த போது சில ஊர்களைக் குறிப்பிட்டிருக்கிறார்கள். அவர்கள் எல்லா ஊர்ப்பெயர்களையும் குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை. சாலித்தொரெ அவர் கூறுவது போல, புன்னாட்டின் பெயரைச் சங்கப் புலவர் கூறாமல் விடவில்லை, அந்தப் பெயரைக் கூற வேண்டிய சந்தர்ப்பம் வாய்ந்தபோது புன்னாட்டின் பெயரைக் கூறுகிறார்கள். சேரன் செங்குட்டு வனைம் பாடிய பரணர் என்னும் சங்ககாலப் புலவர், துளுநாட்டு அரசன் நன்னன் என்பவன் புன்னாட்டின் மேல் போர் செய்ததைக்' கூறுகிறார் (அகம். 266:2) “பொலம்பூண் நன்னன் புன்னாடுகடிந்தென.” சாலிதொரெ அவர்கள் இதையறியாமல், சங்கச் செய்யுளில் புன்னாட்டின் பெயர் சொல்லப்படவில்லை என்று கூறுவது பொய்யாகிறது. புன்னாடு, எருமை நாடு (மைசூர்) துளுநாடு முதலிய பெயர்கள் சங்கச் செய்யுள்களில் கூறப்படுவதைச் சாலித்தொரே அவர்கள் அறியாமால் தவறாக எழுதியுள்ளதைப் பிழையெனத் தள்ளுக.

பூழி நாடு

இது கொங்கு நாட்டைச் சேர்ந்தது அன்று, சேர நாட்டைச் சேர்ந்தது. இங்குத் தொண்டி, மாந்தை என்னும் துறைமுகப் பட்டினங்கள் இருந்தன. இத் துறைமுகங்கள் கொங்குச் சேரருக்கு உரியதாக இருந்தபடியால் இதுபற்றி