பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

39

இங்குக் கூறுகிறோம். பூழிநாடு, சேர நாட்டுக்கும் துளு (கொங்காணம்) நாட்டுக்கும் இடையில் கடற்கரையோரமாக இருந்தது. பூழி என்றால் புழுதிமண் என்பது பொருள். பெரும்பாலும் புழுதி மண்ணாக இருந்தபடியால் இந்த நாட்டுக்குப் பூழிநாடு என்று பெயர் கூறப்பட்டது. பூழிநாடு கடற்கரையோரமாக அமைந்திருந்ததை அம் மூவரினான் குறுந் தொகைச் செய்யுளினால் அறிகின்றோம்.

“யாரணங் குற்றனை கடலே; பூழியர்
சிறுதலை வெள்ளைத் தோடுபரத் தன்ன
மீனார் குருகின் கானலம் பெருந்துறை
வெள்வீத் தாழைத் திரையலே
நள்ளென் கங்குலுங் கேட்டும் நின் குரலே”

(குறும். 163)


பூழி நாட்டின் கிழக்குப் பக்கத்தில் இருந்த மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிக்குச் செருப்பு என்பது பெயர். அந்த மலையைச் சார்ந்து காடுகளும் முல்லை நிலங்களும் புல்வயல்களும் இருந்தன. அங்கு ஆடுமாடுகளை வளர்த்துக் கொண்டு ஆயர்கள் வாழ்ந்து வந்தனர். மலைக்காடுகளில் விலையுயர்ந்த கதிர்மணிகளும் கிடைத்தன.

“முல்லைக் கண்ணிப் பல்லான் கோவலர்
புல்லுடை வியன்புலன் பல்லா பரப்பிக்
கல்லுயர் கடத்திடைக் கதிர்மணி பெறூ உம்
மிதியல் செருப்பில் பூழியர் கோவே!”

(3 ஆம் பத்து 1:20-23)


(கோவலர்-ஆயர், இடையர். ஆபரப்பி-பசுக்களை மேயவிட்டு. கல்-மலை. மிதியல் செருப்பு-காலுக்கு அணியாத செருப்பு, அதாவது செருப்பு என்னும் மலை.)