பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

83

இவ்வரசனைப் பரணர் மாந்தரன் என்று கூறியது போலவே கபிலரும் இவனை மாந்தரன் என்று கூறியுள்ளார். இவ்வரசனுடைய பேரனான இளஞ்சேரல் இரும்பொறையை 9ஆம் பத்தில் பாடிய பெரும் குன்றூர் கிழார் அவனை மாந்தரனுடைய மரபில் வந்தவன் என்று கூறுகிறார். (9 ஆம் பத்து10:9-13). மாந்தரன் பெரும் புகழ் படைத்து அறம் வாழ்த்த நன்றாக அரசாண்டான் என்று கூறுகிறார்.

“வாள்வலி யுறுத்துச் செம்மை பூண்டு
அறன் வாழ்த்த நற்காண்ட
விறன் மாந்தரன் விறன் மருக.”
(9 ஆம் பத்து. 10:11-13)


செ. க. வா. ஆதனின் சமகாலத்தில் இருந்த பாண்டிய அரசன் ஆரியப் படைகடந்த, அரசு கட்டிலில் துஞ்சிய நெடுஞ்செழியன். இவர்கள் காலத்துச் சோழ அரசன் யார் என்பது தெரியவில்லை. கொங்கு நாட்டை யரசாண்ட இவன் காலத்துச் சேர அரசர் இவனுடைய தாயாதித் தமயன்மாராகிய இமய வரம்பன் நெடுஞ்சேரலாதனும் (இ. வ, நெ. சேரலாதன்) அவன் தம்பி பல்யானைச் செல்கெழுகுட்டுவனும் ஆவர். இ.வ, நெ. சேரலாதன், வேளாவிக் கோமான் மகளைத் திருமணம் செய்திருந்தான். அவளுடைய தங்கையை (வேளாவிக் கோமான் பதுமனுடைய இளைய மகளை) செ. க. வா. ஆதன் மணஞ் செய்திருந்தான் என்பதை முன்னமே கூறியுள்ளோம். எனவே இவர்கள் இருவரும் சமகாலத்திலிருந்தவர் என்பது ஐயமில்லாமல் தெளிவாகத் தெரிகின்றது. இரண்டாம் பத்தின் தலைவனான இ.வ. நெ. சேரலாதனும், மூன்றாம் பத்தின் தலைவனான பல்யானை செல்கெழுகுட்டுவனும் ஏழாம் பத்துத் தலைவனான செ. க. வா, ஆதனும் சமகாலத்திலிருந்த தாயாதிச் சகோதரர்கள்.