பக்கம்:கொல்லிமலைக் குள்ளன்.pdf/101

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
97

அவன் தன் திருட்டு வேலையைச் செய்து வந்தான். தச்சுப் பட்டறையில் வேலை செய்யும் தச்சர்களுக்குக்கூட அவனது திருட்டுத் தொழில் தெரியாது. திருட்டை நடத்த அவன் தனியாக வேறு ஆள்களை வைத்திருந்தான். அந்த ஆள்களே தச்சுப்பட்டறைக்கு வந்திருந்தனர். அவர்களைப் பற்றித் தச்சர்களுக்கு ஒன்றுமே தெரியாது.

குள்ளன் வர்ணம் பூசி முடித்த பொம்மைகளை எரியின் வழியாக மீண்டும் தச்சுப்பட்டறைக்குக் கொண்டுவந்து, அங்கிருந்து வஞ்சியாற்றின் வழியாக எடுத்துக் கூடல் பட்டணத்திற்குச் செல்வான். அங்கிருந்துதான் ரயிலிலோ லாரியிலோ அவன் பொம்மைகளைக் கொச்சித் துறை முகத்திற்கு எடுத்துச் செல்வான். அல்லது. ரயில் வழியாக வட நாட்டிற்கும் கொண்டுசென்று, அங்கிருந்து வெளிநாட்டிற்கும் அனுப்புவான்.

வடிவேல் முதலியோர் எரிக்கரையில் பரிசல் இருந்த இடத்திற்கு வந்ததும் உடனே அதில் ஏறிக்கொண்டனர். தில்லைநாயகம் பரிசலைத் துடுப்புப்போட்டு வேகமாகத் தள்ளினான். பரிசல், எரியின் மத்திய பாகத்திற்கு வந்த போதே கொல்லிமலைக் குள்ளனுக்கும் அவன் கூட்டத்தினருக்கும் தெரிந்துவிட்டது. குள்ளனுக்கு அந்தப் பரிசல் எங்கு போய் நிற்கும் என்பது நன்றாகத் தெரியும். அந்த இடத்தில் இறங்கித்தான் கூடல் பட்டணத்திற்குத் தரைவழியாகச் செல்ல முடியும். அதனால் அவன் தன் ஆள்களை மெதுவாகவும் ஒவ்வொருவராகவும் அந்த இடத்திற்குச் சென்று பதுங்கும்படி கட்டளையிட்டிருந்தான். அவனும் அவர்களுக்குப் பின்னாலேயே சென்று தயாராகக் காத்திருந்தான். அந்தச் சமயத்தில் கொஞ்சம் கொஞ்சமாகப் பரவிய இருட்டும் அவர்களுக்கு உதவியாக இருந்தது. குள்ளன் எதிர்பார்த்த இடத்திலேயே பரிசல் வந்து நின்றது. வடிவேலும் மற்றவர்களும் பரிசலை விட்டிறங்கி, எரிக்கரையை நோக்கி வரத் தொடங்கியவுடனே, குள்ளன் தனது ஆள்களுக்குச் சமிக்கை செய்தான். அடுத்த கணத்தில், குள்ளனின் ஆள்கள் பதினைந்து பேரும், குள்ளனும் வடிவேல் முதலியவர்கள் மேல் பாய்ந்தார்கள். வடிவேலின் எச்சரிக்கையெல்லாம் பயன்படாமல் போய்விட்டது.

கொ. ம. கு-7