உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கொல்லிமலைக் குள்ளன்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

17

தோடு நீந்துவதற்கு வேண்டிய ஆயத்தங்களோடு ஆற்றை நோக்கிப் புறப்பட்டார்கள். ஜின்காவிற்கு உற்சாகம் தாங்கவே முடியவில்லை. அது 'ஜிங்ஜிங்' என்று குதித்துக்கொண்டும் தங்கமணியைச் சுற்றி ஆடிக்கொண்டும் சென்றது.

வஞ்சியூர்ப் பக்கமாக ஓடுகின்ற அந்த ஆற்றுக்குக் கருவேட்டாறு என்று பெயர். ஆனால், பொதுவாக அதை வஞ்சியாறு என்றே கூறுவார்கள். அந்த ஆற்றில் தண்ணீர் தெளிவாக ஓடிற்று. அந்த ஆறு தூரத்திலே உயர்ந்து தோன்றும் இரண்டு மலைகளுக்கு நடுவே புகுந்து போவது போல் காட்சி அளித்தது. அந்தக் காட்சி பார்ப்பதற்கு கவர்ச்சியாக இருந்தது. அந்த ஆற்று நீரிலே சுமார் இடுப்பளவு ஆழத்திற்குச் சென்று, ஆற்றின் ஓட்டத்தை எதிர்த்து நீந்துவது தங்கமணிக்கும் சுந்தரத்திற்கும் ஒரு புதிய இன்ப அனுபவம். இவ்வாறு அவர்கள் தங்கள் கைகள் சலிக்குமட்டும் ஆற்று வெள்ளத்தை எதிர்த்து நீந்தினார்கள். உற்சாகத்தினால் அவர்கள் அதிக ஆழமான பகுதிக்குப் போய்விடாமல் வீர்சிங் பார்த்துக்கொண்டார். அதே சமயத்தில் கண்ணகிக்கு நீச்சலும் பழக்கிக்கொண்டிருந்தார். காற்று அடித்த ரப்பர் வளையத்தை இடுப்பிலே கட்டிக்கொண்டு நீந்துவது கண்ணகிக்கு எளிதாக இருந்தது. கண்ணகி குதூகலமாகச் சிரித்துக்கொண்டும் கைகளையும் கால்களையும் வீசியடித்துக்கொண்டும் நீந்த முயன்றாள். அவளுக்கு நீச்சல் பழக்குவதால் விர்சிங் நீந்தவில்லை. சட்டைகளையும் கழற்றவில்லை. ஜின்கா தண்ணீரிலே முழுகுவதும், ஆழமான இடத்திற்கெல்லாம் சென்று பாய்ந்து பாய்ந்து நீந்துவதுமாக இருந்தது.

எல்லாரும் களைத்துப்போகும் வரையில் இவ்வாறு நீந்தினார்கள். பிறகு, கரையை நோக்கிப் புறப்படலானார்கள். கண்ணகி வீர்சிங்கின் இடக்கையைப் பற்றிக்கொண்டு கரையை நோக்கி நடந்தாள். தங்கமணியும் சுந்தரமும் வீர்சிங்கின் வலக்கைப் பக்கமாகத் தண்ணீரில் நடந்தனர். ஜின்கா மட்டும் இன்னும் நீந்திக்கொண்டே முன்னால் சென்றது. ஓரிடத்திலே தண்ணீருக்கடியிலே வழுவழுப்பான