பக்கம்:கொல்லிமலைக் குள்ளன்.pdf/23

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

19

அவனை யாரென்று தெரியாதது போலவே இப்பொழுது நடிப்பதுதான் நல்லது. அப்படி நடித்தால்தான் அவனிடமிருந்து தப்ப முடியும்” என்று தங்கமணி பதில் சொன்னான்.

இதற்குள் குள்ளனும் பரிசல் ஓட்டியும் அருகில் வந்து விட்டார்கள். குள்ளன் தனது இடக்கையில் தனது கைக்குட்டையைச் சுற்றிக்கொண்டிருந்தான். "வந்து பரிசலில் ஏறுங்கள். அதோ அங்கே தெரிகிறதே, எதிர்க்கரையிலே உள்ள காட்டில் மரங்களும் பூக்களும் நிறைய உண்டு. பார்க்க அழகாக இருக்கும். அவற்றையும் பார்த்துவிட்டுப் பிறகு சத்திரத்துக்கு அழைத்துச் செல்வான் இவன்" என்று கூறினான் அவன். தங்கமணி, சுந்தரம், கண்ணகி ஆகிய மூவரும் பரிசில் ஏறினர். ஜின்காவும் தாவி ஏறிக்கொண்டது. பரிசலோட்டி துடுப்பைக்கொண்டு பரிசலை நீரில் வலிக்கத் தொடங்கினான்.

“நீங்களும் எங்களுடன் வரவில்லையா?" என்று கண்ணகி கேட்டாள்.

“தாழிவயிறா, ஜாக்கிரதையாகத் துடுப்புப் போடு. நான் சொன்னதை மறந்துவிடாதே" என்று குள்ளன் உரக்கச் சொன்னான். அதற்குள் பரிசலும் முப்பது கஜத்திற்குமேல் தண்ணீரில் சென்றுவிட்டது. தாழிவயிறன் வேகமாகத் துடுப்புப் போட்டு, எதிர்க்கரையில் உள்ள காட்டின் கரைக்குப் பரிசலைச் செலுத்த முயன்றான். தங்கமணியும் சுந்தரமும் திகைப்போடு உட்கார்ந்திருந்தனர். தாழிவயிறனையும் தங்க மணியையும் ஜின்கா மாறி மாறிக் கவனித்துக்கொண்டிருந்தது.

கொஞ்ச நேரத்தில் பரிசல் வஞ்சி ஆற்றின் மறுகரையை அடைந்தது. அதிலே உயர்ந்த மரங்களும் குற்றுச் செடிகளும் பூச்செடிகளும் வளர்ந்திருந்தன. அந்த இடத்திற்கு வந்ததும் தாழிவயிறன் கீழே இறங்கிப் பரிசலைக் கையில் பிடித்துக்கொண்டு எல்லாரையும் கீழே இறங்குமாறு சொன்னான்.

"இங்கே இறங்க வேண்டாம். திரும்பிப் போகலாம். வயிறு பசிக்கிறது” என்றாள் கண்ணகி.

"எனக்குந்தான் பசி. ஆனால், இந்தக் காட்டைப் பார்க்காமல் போகப்படாது. இறங்குங்கள்" என்றான் தாழிவயிறன்.