பக்கம்:கொல்லிமலைக் குள்ளன்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

67

திருக்கிறாள். இரவெல்லாம் சரியாகத் தூங்காததால் அவளுக்கு நல்ல தூக்கம் வந்துவிட்டது. நீர்வீழ்ச்சியின் சலசலப்புச் சத்தத்தைக் கேட்டுக்கொண்டே அவள் படுத்துத் தூங்கி விட்டாள். ஜின்காவோ இரவெல்லாம் கண்மூடவேயில்லை. அதனால் அதுவும் கண்ணகியின் பக்கத்திலே படுத்துத் தூங்கிவிட்டது.

“கண்ணகி!” என்று சுந்தரம் சிரித்துக்கொண்டே கூவினான். “ஜின்கா! உனக்குமா தூக்கம்?” என்று தங்கமணி குதூகலமாக முழங்கினான். கண்ணகி திடுக்கிட்டெழுந்தாள். ஜின்காவும் எழுந்து, குற்றம் செய்துவிட்டதைப் போல எல்லாரையும் பார்த்துப் பார்த்து விழித்தது.

பிறகு, அனைவரும் உற்சாகமாகக் குகையை நோக்கிச் சென்றார்கள். ஒருவிதமான கவலையும் இல்லாமல் நன்றாக உணவருந்தினார்கள். தில்லைநாயகம் செய்த சமையல் அவர்களுக்கு அவ்வளவு சுவையாக இருக்கவில்லையென்றாலும் பசி மிகுதியால் சுவையை அவர்கள் கவனிக்கவில்லை. சாப்பிட்டு முடிந்ததும் மருதாசலம் குறிப்பிட்ட ரகசிய குகையைப் பார்க்க வேண்டுமென்று எல்லாரும் ஆவலோடு புறப்பட்டார்கள்.

“கையிலே ஊன்றுகோல் இல்லாமல் அந்த வழியிலே போக முடியாது. ஆளுக்கொரு தடி வெட்டிக் கொடுக்கிறேன்” என்று கூறிக்கொண்டே மருதாசலம், வழியிலிருந்த ஒரு மூங்கிற்பு தரில் மூங்கிற்கழிகளை வெட்டி எடுத்தான். அந்தக் கழிகளைப் பிடித்துக்கொண்டு மருதாசலம் முன்னே செல்ல, மற்றவர்கள் பின்தொடர்ந்தார்கள். கண்ணகிக்கு உதவியாக இருக்கத் தில்லைநாயகம் அவளுக்கு முன்னால் அவள் கையைப் பிடித்துக்கொண்டு நடந்தான். மலைச்சரிவிலே மலையை ஒட்டினாற்போல அந்த வழி சென்றது. மேலே உயர்ந்த மலையும், கீழே கிடுகிடு பள்ளத்தாக்கும் இருந்தன. கொஞ்சம் தவறினால் அப்பள்ளத்தாக்கில் விழுந்து மடியவேண்டியதுதான். அதனால் மருதாசலம் எச்சரிக்கை செய்துகொண்டே, மெதுவாக நடந்தான். சில இடங்களில் பாறைகளைப் பிடித்துக் கொண்டு ஆள் உயரத்திற்கு இறங்க வேண்டியிருந்தது. சில இடங்களில் அதைப் போலவே ஏற வேண்டியிருந்தது. மூங்கிற் கழியை ஊன்றிக்கொண்டு எல்லாரும் அடிமேல் அடி எடுத்து