மல்லாந்து படுத்தவாறே அந்த வேரைப் பிடித்துக்கொண்டே கொஞ்சம் கொஞ்சமாக மேலே எட்டி எட்டிப் பிடித்தான். அப்படிப் பிடித்து மெதுவாகத் தன் உடம்பையும் வெளியே இழுத்தான்.
பிறகு, அந்த வேரைப் பற்றிக்கொண்டே அந்தரத்தில் தொங்கினான். இப்பொழுது மேலே நன்றாகப் பார்க்க முடிந்தது. கொஞ்சங்கொஞ்சமாக அந்த வேரைப் பற்றிக்கொண்டு மேலே தொற்ற முடியுமானால் துவாரத்தின் அடிப்பகுதியில் காலை வைத்து நன்றாக நின்றுகொள்ளலாம். பிறகு நிதானமாக அங்கிருந்து மேலே ஏறவோ, கீழே இறங்கவோ வழி கண்டு பிடிக்கலாம். இந்த எண்ணம் வரவே குள்ளனுக்கு ஒரு புதிய உணர்ச்சி பிறந்தது. இயல்பாகவே அவன் நல்ல உடலுறுதியுள்ளவன். நீச்சலினாலும் வேறு தேகப்பயிற்சிகளாலும் அவன் தன் உடம்பை லாகவமாகப் பழக்கி வைத்திருந்தான். அதனால் அவன் மூச்சுப் பிடித்து, தன் முழு சக்தியையும் பயன்படுத்திக் கைகளை மாற்றிமாற்றி வைத்து மேலே தொற்றினான். கால்களையும் பாறை மேல் வைத்துப் பார்த்துப் பார்த்து ஏதாவது சிறிது துறுத்திக்கொண்டிருக்கிற பகுதியையும் தனக்கு உதவியாகப் பயன்படுத்திக்கொண்டான். பெருமுயற்சியால் அவன் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிக் கடைசியில் துவாரத்தின் அடிப்பகுதியிலே கால்களை ஊன்றி உறுதியாக நின்றுகொண்டான். அந்த நிலையிலே சற்று இளைப்பாறினான்.
பிறகு சுற்றிலும் உற்று நோக்கினான். அவன் வலக் கைப்புறமாக இச்சி மரத்தின் வேர் கீழ்நோக்கிப் பாறை இடுக்கிலே ஓடிக்கொண்டிருந்தது. சுமார் ஐந்தடி நீளத்திற்குப் பின் பாறையிலே இடுக்கில்லாமையால் வேர் கொஞ்ச தூரம் பாறைக்கு மேலாகவே சென்று, மீண்டும் ஒரு பாறை இடுக்கிலே உள் நுழைந்திருந்தது. பாறைக்கு மேலாகச் செல்லும் வேர்ப்பகுதியை எட்டிப் பிடித்துக் கீழே தொங்க முடியுமானால் காலுக்கும் கீழே ஆறடி ஆழத்தில் துறுத்திக் கொண்டிருந்த ஒரு சிறிய பாறையை அடையலாம். தொங்கியே அதன் மேலே குதித்துவிடலாம் என்று அவ