உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கொள்கையில் குழப்பமேன்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

117

அந்த வேலினை வீசிடக் கண்டால், தம்பி! மூதாட்டியைத் தள்ளிவிடு, ஓநாயேகூட அல்லவா, இப்படி ஒரு மனமா? என்றெண்ணித் திகைத்துவிடும்!

அதுபோலல்லவா, செய்துவிட்டனர்.

எந்த இடத்திலே உறுதியை எதிர்பார்த்தேனோ, அங்கு அல்லவா, ஏற்பட்டுவிட்டது, மனத்தளர்ச்சி.

என் சங்கடத்துக்குக் காரணம் அதுவன்றோ!

ஒன்று சொல்லுவேன் தம்பி ! எனக்கென்னவோ, பேசத் தெரிந்தவர்களெல்லாம், திரு இடத்தைப்பற்றியே பேசவேண்டும். எழுதத் தெரிந்தவர்களெல்லாம் இன்பத் திராவிடத்தைப்பற்றியே எழுதவேண்டும். ஆற்றல் உள்ளவர்கள் அனைவரும் தமது ஆற்றலை, இந்த அருமைத் திராவிடம் விடுதலைபெறப் பயன்படுத்த வேண்டும், என்று தோன்றுகிறது. காணும் செங்கரும்பு அவ்வளவும், நமது குழந்தைக்கு வேண்டும் என்று எண்ணுவது போன்ற பேதை நெஞ்சம் ; என் செய்வது !

எனினும், என் மனநிலை அறிந்து, பலர், முன்னிலும் அதிக மும்முரமாகப் பணியாற்றி என் மனச்சோர்வினைப் போக்கி வருகின்றனர், அஞ்சற்க என்றும், கழகப்பணிக்கு ஆவன செய்வோம் என்றும் களிப்பூட்டும் முறையில் எழுதுகின்றனர்.

விலகியோர், நம்மைவிட்டும் கழகத்தை விட்டும் விலகினாரில்லை. ஆண்டு பலவாக அரும்பாடுபட்டு நாம் கட்டிக் காத்துவரும் கொள்கையை விட்டுமன்றே விலகிச் சென்றுவிட்டனர். இனி அவர்தம் போக்கு, நம் மாற்றார்க்கு நிலாச் சோறு ! நாம் அது குறித்துக் கவலையற்றுப் பணியாற்றிச் செல்வதே முறை என்று கூறுகின்றார்.

கொ—8