உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கொள்கையில் குழப்பமேன்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126

சில் முதலிடம் கொடுக்கிறார்கள்? கொடுப்பதாயின், தமிழ் நாடு தனிநாடாக இல்லாதிருக்கும் தன்மை, அதனால் ஏற்படும் இழிவுகள் இன்னல்கள், சுரண்டல், அந்தச் சுரண்டலால் வடநாடு கொழுத்து வரும் பயங்கரமான உண்மை, இவைபற்றி அல்லவா பேச்சு, விறுவிறுப்பாக, வீரம் கொப்பளிப்பதாக அமையும், எங்கிருந்து வரப்போகிறது அந்த எண்ணம்! அதுதான் சொல்லிவிட்டார்களே,

வடநாடு நரகமுமல்ல, வடநாட்டுக்காரர் யமகிங்கரருமல்ல.
வடநாட்டோடு ஒட்டி வாழலாம்.
வடநாட்டு முதலாளியும் இங்கு வந்து தொழில் நடத்தலாம்.

என்று. இது போதாதா, இவர்களைப் பொட்டிட்டு, ஆலத்தி எடுத்து, ஐஞ்சும் மூணும் அடுக்காய்க்கொடுத்து, பாராட்ட போற்ற, வாழ்த்த! கசக்கிறதா அந்த ஏடுகளுக்கு, எந்த மாவீரன் வடநாட்டானிடம் சிக்கிக்கொண்டிருக்கிற வரையில் திராவிடன் தலை தூக்கமுடியாது என்ற முழக்கமிட்டாரோ; அவரே முன்வந்து, அதே முழக்க மொழியில்,

வடநாட்டு முதலாளி இங்கு வந்து தொழில் நடத்தலாம்.

என்று கூறுவதை, கொட்டை எழுத்தில் வெளியிட; குதூகலம்கொள்ள!! புண்ணிய க்ஷேத்திரங்களிலே உள்ள பண்டாக்கள், தம்மை நாடிவருவோர் எழுதிக்கொடுக்கும் நற்சான்றுகளைப் படித்துப் படித்து மகிழ்வதைப் போலல்லவா, அவர்கள், வடநாட்டு எதிர்ப்புணர்ச்சியை, வரிந்து கட்டிக்கொண்டு ஊட்டி வந்தவர், வாயார, மனமார, வாழ்க வடநாடு! என்று கூறும் முறையில் பேசுவது கேட்டு மகிழ்ந்து, தமது இதழ்களிலே வெளியிட்டு அதனைத் திரும்பத் திரும்பப் படித்துப் பார்த்து மகிழ்ச்சி கொள்வார்கள்.