உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கொள்கையில் குழப்பமேன்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128

திட்டங்கள் அத்தனையும் வடக்கையே வளப்படுத்தும் போக்கு.
மூன்றாம் திட்டத்திலும் முகத்தில் கரி பூசப்பட்ட கேவலம்.
எதற்கு எடுத்தாலும் டில்லிக்கு எடுக்கும் காவடி, சிந்து.

இவைபோல அடுக்கடுக்காய் எத்தனையோ, உண்டன்றோ! எடுத்தியம்பக் கேட்டீரோ இவைபற்றி எல்லாம்! இல்லை! ஏன் இல்லை? பேசுவரேல், கூசாமல் இன்று இடங்கொடுக்கும் ஏடுகளின் நேசமும் முறிந்துவிடும்; இருட்டடிப்பும் பின் தொடரும்!! எனவே, விலகியோர், இவைபற்றிய பேச்சை, கட்டி வைத்துவிட்டார் மூட்டை! இப்போது இருப்பதெல்லாம் என்னை இழிவு செய்யும் திருவாய் மொழி—அதற்கே இடம் உண்டு, அந்த இதழ்களிலெல்லாம், வேறு, சட்டத்திலே உள்ள சத்தற்ற நிலைமைகளை மெத்தச் சிரமப்பட்டுப் படித்துப் பொருள் அறிந்து, இத்தனை தொல்லை நமக்கு இருப்பதனால், தமிழ் நாடு தனியே இயங்க ஒரு தன்மான முயற்சி வேண்டும், என்று பேசத் தொடங்குவரேல், அவன் போனான்—இவர் வந்தார்! அடைத்திடு கதவை என்று அன்றே கட்டளை பிறக்கும்.

மாற்றார் மனம் மகிழ நடந்துதான் வாழ்ந்திட இயலும் என்ற நிலை பிறந்துவிட்டால், பெற்றுவிட்டால், இடையே நின்று ஒரு திருத்தம் பெறவும் இயலாது; மணல் மேடு ஏறி நின்றார், கால் இடறிப்போமானால், எங்கு வந்து வீழ்வார்? எவரறியார் இந்த நிலை? எனவே வேகமாய் இவர்கள் 'இந்தியர்' ஆகியே தீரவேண்டும்; வேறு வழியில்லை; வேறில்லை முறைகூட.

இவர்கள் இதுபோலத்தான், இப்போதே என்று, வடக்கே உள்ள சில ஏடுகள், வரைந்திருக்கக் கண்டேன்.