20
"நமது வெற்றி பற்றி ஒரு பத்திரிகை எழுதியிருக்கிறது—இந்த வெற்றி திடீர் என்று அவர்களுக்கு ஏற்பட்டது அல்ல—இடறி விழுந்ததால் ஏற்பட்டதல்ல—அவர்கள் சட்டமன்றத்தில் எதிர்க் கட்சியாக இருந்து நடந்து கொள்ளும் முறையும், எதை எந்த முறையில் எதிர்க்க வேண்டும் என்று அறிந்து அந்தப் பண்புடன் அவர்கள் எதிர்க்கின்ற முறையும்தான், அவர்களுக்கு இந்த வெற்றியைத் தேடித் தந்திருக்கிறது என்று அந்தப் பத்திரிகை கூறுகிறது."
தம்பி! சட்டசபையில், நாம் எப்படி நடந்துகொண்டிருக்கிறோம் என்கிற பிரச்சினை இருக்கட்டும்—இப்போதைக்கு—இந்த அளவில்.
பெரிய விஷயத்திலேயே பேதம் வந்துவிட்டதே, திராவிட நாடு பகற்கனவு என்று கூறுகிறாராமே, அதைப் பற்றி என்ன சொல்வது என்று யோசிப்பாய். இதிலேயும் சிக்கல் இல்லை, சங்கடம் இல்லை.
திராவிட நாடு பகற்கனவு என்று நேரு கூறினார்—ஏற்க மறுத்துவிட்டோம். காமராசர் கூறினார்—கவைக்குதவாப் பேச்சு என்றோம்.
பெரியார் பேசினார்—போக்கை மாற்றிக்கொண்டார் என்கிறோம்.
இப்போது தோழர் சம்பத் பேசுகிறார் ! அதனால் என்ன ?
ஆனால், பலர் கூறியும் நமக்கு, 'திராவிடநாடு' பிரச்சினையில் ஏன், அவ்வளவு அழுத்தமான, அசைக்க முடியாத நம்பிக்கை இருந்து வருகிறது? அந்த நம்பிக்கையை நாம் அவசரப்பட்டு மேற்கொள்ளவில்லை—ஆத்திர உணர்ச்சி காரணமாக மேற்கொள்ளவில்லை—மிகப் பெரியவர்கள், மேதைகள் என்ன சொல்வார்களோ என்று