உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கொள்கையில் குழப்பமேன்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

29

அந்தத் துயர்ப்படும் மக்களைப் பார்க்கவேண்டுமென்று. ஆனால், அதே நேரத்தில், புயலால் தாக்குண்ட பிரதேசத்திற்கு முந்நூறு மைல் தொலைவில் திருவிதாங்கூர் கொச்சிராஜ்யத்தில், டில்லியின் அரசியல் புழுக்கத்தினின்றும் ஓய்வு பெற, சில நாட்களை உல்லாசமாகக் கழிக்க வந்திருந்தார். உப்பங்கழிகளில் உல்லாசப் படகேறிக் குடும்பத்தோடு இன்பப் பொழுது போக்கினார், கேரளத்துக் தென்னஞ் சோலைகளினூடே. பின் அது சலித்தபோது மலைமீதேறி அங்கு அடவியில் உள்ள வனவிலங்குகளான யானைகளையும், புலியையம், ஓநாயையும், மானினங்களையும், கரடிகளையும் கண்டுகளிக்க விரும்பினார். மலையில் மகாராஜாவின் கண்ணாடி பங்களாவில் இரவு முன்னேரத்திற்கே சென்று பலகணி வழியே கீழே ஓடும் கானாற்றில் நீர் பருகவந்த விலங்குகளையும், நிலவொளியில் காதல் புரியும் காட்டானை ஜோடிகளையும் கண்டு ரசித்துக் களிப்படைந்துகொண்டிருந்தார் எனச் சேதி வந்தது.

"இதை ஏன் இவ்வளவு ஆத்திரமாகக் கூறுகிறேன் என்றால், பீகாரில் பஞ்சம் என்றதும் துடித்த அவரது உள்ளம், ஆடிய அவரது உடம்பு, தமிழகத்தில், ராயல் சீமையில் பஞ்சம் என்றபோதும், தஞ்சையில், திருச்சியில், புயல் என்றபோதும் ஆடாமல் அசையாமல் அமைதியாக—புதுவித இன்பங்களைத் தேடிக்கொண்டிருந்தது என்பதைப் புரியாதவர்கள் புரிந்துகொள்ளவேண்டு மென்பதற்காகவே இதைச் சொல்லுகிறேன்.

"இந்தனைக்கும் வடநாட்டாருக்குள்ளேயே நேரு ரொம்பவும் யோக்கியமானவர், கருணையுள்ளவர் என்று பெயர். இவரே, 'ரோம் நகரம் பற்றி யெரியும்போது பிடில் வாசித்த நீரோ'வாகிவிட்டார் என்றால், இனி இவருக்குப் பின் வரும் இவரது வாரிசுகள் எப்படி இருப்பார்கள் என்பதை நாமே யூகித்துக் கொள்ளலாம்.