33
திருப்தி அடையவேண்டும் என்ற கட்டம் வந்ததுபோலவும் இப்போது நாம், நமது கோரிக்கையைக் குறைத்துக்கொள்ளக் காரணம் என்ன? கழகத் தோழர்களையோ, பொது மக்களையோ நாம் இப்படி ஒரு மாறுதலுக்குத் தயாராகுங்கள் என்று கூறிக்கொண்டு இருந்திருக்கிறோமா?
பழி ஏற்படும்! பாதையை மாற்றாதீர்கள் !!—என்று கழக மாநாட்டிலே 1959-ல் பேசுகிறோம். இப்போது கிடைக்கக் கூடியதைக் கேட்போம்—நடக்கக் கூடியதைப் பார்ப்போம் என்று பேசுவதா ! நாம், எந்தெந்த நேரத்தில் மாறுகிறோமோ, அதே வேளையில், நமதுமுன் பேச்சுக்களைக் கேட்டு நம்பிக்கை கொண்டு, நாம் காட்டிய வழிநடந்து கஷ்டநஷ்டம் ஏற்றவர்கள் சரி ! அவர்கள் மாறிவிட்டார்கள், நாமும் மாறிவிடலாம், என்று வந்துவிடவேண்டுமா ? வந்துவிடுவார்களா ? முறைதானா அது ?
இதற்கு, பெரியார், திராவிடநாடு, வெங்காயநாடு என்றாரே, அப்போதே, ஆமாம் ! வாடைகூட அடிக்கிறது என்று கூறி, விட்டுவிட்டு வந்துவிட வேண்டும், என்று யோசனை கூறியிருக்கலாமே. அவராவது, கேட்கும்போது ஒருகணம், நியாயந்தான் என்று எண்ணத்தக்க காரணத்தைக் காட்டினாரே ! எல்லாம் ஒண்ணா இருந்தானுங்க — திராவிடநாடு கேட்டோம்—இப்பத்தான் ஆந்திராக்காரன் போயாச்சி — மலையாளத்தான் பிரிஞ்சாச்சி—கன்னடத்தானும் போனான்—இப்ப ஏன் திராவிடநாடு, வெங்காயநாடு?"—என்று பேசினாரே. அப்போது கழகத்தவரைத் கூட்டி திராவிடநாடு, பகற்கனவு என்று சொல்ல முற்பட்டோமா? தவறு, என்றாவது தோன்றிற்றா நமது மனதுக்கு? அவர் சொல்லிக்கொள்ளட்டும், நமக்குக் கவலையில்லை, என்று சொன்னோம். சொன்னோமா? சொன்னார்! யார் ? தோழர் சம்பத்து, 1959 அக்டோபர் 17, 18-ல் சென்னை மாநாட்டில்—தெளிவாக—அழுத்தந்திருத்தமாக;