34
"ஆந்திரத்தில் நம் கழகம் இல்லை என்று காங்கிரசுக்காரர்கள் சொல்வதற்காக நாம் வெட்கப்பட வேண்டிய அவசியமில்லை. நமக்கு, நமது இலட்சியத்தின்மீது அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது. நாம் பொறுப்புள்ளவர்கள். அவசரத்தினாலும் சில்லறையில் உள்ள நாட்டத்தினாலும் தமிழ்நாடு போதும் என்று சொல்லுபவர்கள் சொல்லட்டும்—நமக்குக் கவலையில்லை."
இப்படிப் பேசிவிட்டு இப்போது தமிழ்நாடு போதும் என்று இவரே பேசினால், கேட்பவர்களுக்கு என்ன சொல்லத் தோன்றும்? பெரியார், தமிழ்நாடு போதும் என்று சொன்னதற்கு இவர் என்ன பதில் சொன்னாரோ, அதேதானே நினைவிற்கு வரும் ! அதைத்தானே சொல்லத் தோன்றும் !
திராவிடநாடு திராவிடருக்கே எனும் இலட்சியம் இன்று 'பகற்கனவு' பட்டியலில் சேர்க்கப்படுகிறது. எனக்கோ, தம்பி ! அந்த இலட்சியத்திலே இம்மி அளவும் பற்றுக் குறையவில்லை; நம்பிக்கை தளரவில்லை; எனினும் என்னால், அதனை, தோழர் சம்பத் சொன்னதுபோன்ற அழுத்தந்திருத்தமான முறையிலே சொல்லத் தெரியவில்லை. அதனால், மறுபடியும், அது குறித்துத் தோழர் சம்பத் பேசியிருப்பதைத்தான், நான் மேற்கோள் காட்ட நேரிடுகிறது. இது 1958-ல் திருவாரூரில் நடைபெற்ற தி. மு. க. மாநாட்டில் பேசியது:
"இத்தாலிய நாட்டு விடுதலை வீரன் மாஜினி மக்களைப் பார்த்துச் சொன்னான்: 'இந்த நாட்டினுடைய சுதந்தரத்திற்கான தலைப்பைத் தந்துவிட்டோம். அதனுடைய அத்தியாயங்களை எழுதவேண்டியது உங்கள் கடமை" என்று.
"அதைப்போலத்தான் நம்முடைய அரிய தலைவர் அண்ணா அவர்கள் திராவிடநாட்டின் எதிர்கால வாழ்வுக்-