6
கிடக்கவேண்டிய நிலையில்லாதவர்கள்—நிமிர்ந்த நெஞ்சினர்—இவர்களெல்லாம் காங்கிரசில் தான் இருக்க முடியும் என்றோம். இந்த அண்ணாத்துரை நமது வார்த்தையைப் பொய்யாக்கி, நான் இளைஞன் ! நான் சரிகைக் குல்லாய்க்காரன் அல்ல ! படித்துமிருக்கிறேன், பதவிக்காகப் பல்லிளித்துக் கிடக்கவில்லை; நான் கண்டிருக்கிறேன் காங்கிரசின் போக்கை என்று பேசி, இளைஞர்களிடம் இருந்துவந்த அழுத்தமான காங்கிரஸ் பக்தியைப் பாழாக்கினானே ! பயலுக்கு இப்போது கிடைக்கிறது சரியான சவுக்கடி ! சுடச்சுடக் கொடுக்கிறார் ! சுற்றிச் சுற்றிக் கொடுக்கிறார் ! எந்தப் பெரியாருக்குப் பராக்குக் கூறிக்கொண்டிருந்தானே, அதே பெரியார் கொடுக்கிறார் சூடு ! துடிக்கிறான் ! சுருண்டு கீழே விழுகிறான் ! வேண்டும் பயலுக்கு; இதுவும் வேண்டும். இதற்கு மேலும் வேண்டும்!!—என்று காங்கிரஸ் வட்டாரத்தினர் கூறிக் களிப்படைந்தனர்.
பெரியார் பேசக் கேட்டுக் கேட்டுத்தான், காங்கிரஸ் வட்டாரமே, என்னை ஏரக்கற்றுக்கொண்டது; பயிற்சியே அவர்களுக்கு அந்த முறையிலே கிடைத்ததுதான்.
முதலிலே, பெரியார் என்னை ஏசிப்பேசக்கேட்டு மகிழ்ந்தனர்—காதுகுளிர! பிறகு, தாங்களே பேசலாயினர்—நாமணக்க!!
என்ன தெரியும் இந்த அண்ணாத்துரைக்கு என்று துவக்கினர்களானால், காங்கிரஸ் பேச்சாளர்கள் தங்கள் வசம் உள்ள நாராசம் அவ்வளவும் தீருமளவு பேசித் தீர்ப்பார்கள்.
அந்த ஆர்வத்திலே, ஆவேசத்திலே, சபர்மதிச் சிறப்பு, தண்டியாத்திரையின் மகிமை, உப்புச் சத்யாக்கிரகப் பெருமை, இர்வின்—காந்தி ஒப்பந்த அருமை என்பவையாவும் அவர்களுக்கு மறந்தேபோய்விடும்!