உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கொள்கையில் குழப்பமேன்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

73

"தென்னகத்தில் இருந்துகொண்டு அகில இந்திய அரசியல் பேசினால்—பாரதப் பண்பாடுபற்றிப் பேசினால், 'அவர்கள், பிறந்த மண்ணுக்கும் துரோகம் செய்கிறார்கள்' என்பதுதான் பொருள். அவர்கள், எங்கேயோ இருக்கிறவர்களுக்கு ஆள் பிடித்துக் கொடுக்கும் கங்காணிகளாகத் தானிருக்கமுடியும்! இது குறுகிய புத்தியால் சொல்வதல்ல—பிறந்த நாட்டுக்குப் பெருமை தேடித் தரும் பரந்த எண்ணம்! தத்துவ ரீதியில், 'வடக்காவது தெற்காவது' என்று பேசினால், அவர்கள் அறியாமையில் மூச்ழ்கியிருக்கிறார்கள்—அல்லது துரோகமிழைக்கிறார்கள் என்பதுதான் பொருள்."

தத்துவ விளக்கம் தரமாகத்தான் இருக்கிறது—ஒப்புக் கொள்ளக் கூடியதாகவே இருக்கிறது. இதைப் படித்த பிறகு, எவரும், தென்னக அரசியல் என்பது தெகிடு தத்தம் அல்ல என்பதை உணருவார்கள் என்றெல்லாம் தோன்றுகிறதல்லவா நமக்கு ! ஆயினும், பெரிய இடங்களில் உள்ளவர்கள், இதை ஒப்புக் கொள்ள மறுக்கிறார்கள்—அகில இந்தியா என்பதுதான் உண்மை. நியாயம், தேவை ; சட்டம் என்கின்றனர்—அவர்களை என்னென்பது?

தெளிவற்றவர்கள், பிடி பட்டவர்கள், வாழ்வை நாடுவோர், என்று இப்படியெல்லாம் தான் சுற்றி வளைத்துக் சூடு குறைத்துக் கண்டனச் சொல்லைக் கரும்புச் சாற்றினில் தோய்த்தெடுத்துப் பயன் படுத்துவோம். நமக்கெங்கே வருகிறது, தீப்பொறி! நாம் தான் எல்லோரும் இசைவு தர வேண்டும், அதற்கான முறையில், கனிவாகப் பேச வேண்டும், என்ற பைத்தியக்காரத் திட்டம் கொண்டவர்களாயிற்றே! தீர்த்துக் கட்டு! வெளுத்து வாங்கு! என்ற போக்கு, வருவதில்லையே நமக்கு—நல்ல வேளையாக!! தெற்காவது வடக்காவது, எல்லாம் ஒன்று என்று, காமராசர் பேசுகிறார், கக்கன் பேசுகிறார், சுப்பிரமணியம் பேசுகிறார். நவஇந்தியா எழுதுகிறது, மேலும் பலர், பலப்பலர்! இவர்-