உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கொள்கையில் குழப்பமேன்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

இப்படி இவர்கள் மமதையோடு பேசுவதற்குக் காரணம், இவர்களிடமுள்ள ஆதிக்க அரசியல் நிலைதான் என்பதைத் தவிர வேறென்ன ?"

"இந்த அரசியல் நிலை, வெளி விவகாரங்களில் கூட—எதிர் பாராத இடங்களில் இருந்தெல்லாம் கூட, சிற்சில நேரங்களில் வெற்றியைத் தேடித் தரக் கூடும் ; ஆனால், உள் நாட்டில் என்றென்றைக்கும் இந்த அரசியல் நிலை அநியாயத்திற்கும் அக்கிரமத்திற்குமே துணைபோய்க் கொண்டிருக்காது என்பதை மமதையோடு பேசுபவர்கள் உணர்ந்தாக வேண்டும்."

"நமது கோரிக்கையை எந்தக் காரணங் காட்டி இவர்கள் மறுக்கிறார்கள்? எவருக்கு இதுவரை இந்தத் துணிவு இருந்தது?"

"நாம் நமது கோரிக்கையின் நியாயத்தை எந்த மன்றங்களிலும், எவரிடத்திலும் வாதிட்டு நிலைநாட்டத் தயாராயிருக்கிறோம்—என்று, ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் சொல்லி யிருக்கிறோம்."

"உலகத்திலே நீதிமான்கள்—நேர்மையாளர்கள்—என்றுள்ள எவரையும் அழைத்து வாருங்கள் ; எங்கள் கோரிக்கை நியாயமா, இல்லையா ? என்று கேட்போம்—என்று கூறி யிருக்கிறோம்."

"அகில இந்தியா என்று துவங்குகிற எந்த ஒரு காரியமானாலும் சரி—அது—நாடகக் கழங்கள், இசைக் கூடங்கள் என்ற கலை நிறுவனங்களாயினும் சரி—அல்லது அகில இந்திய உளுத்தம் பருப்பு உடைப்போர் சங்கம் என்றிருப்பதாயினும் சரி—அரசியல் கட்சிகளாயிலும் சரி—அவைகள் வடக்கிற்கு வாழ்வும் ஏற்றமும் தரவும், தெற்கிற்குச் தேய்வும் தாழ்வும் தரவுந்தான் பயன்பட முடியும்."