8
கடனைத் திருப்பிச் செலுத்திவிட்டவனுக்கு ஏற்படும் மனநிம்மதி எனக்கு ஏற்படுகிறது.
பெரியாரும், காங்கிரசாரும், இந்த வசவுகளை வீசியபோது, எப்படி, என்னை அறிந்ததால், இதயத்தில் கொண்டதால், அந்தச் சொற்களை, தம்பி! நீ பொருட்படுத்தவில்லையோ அதுபோலவேதான் இதற்கும்.
குயிலுக்கு, கிளியின் அழகு இல்லை; என்ன செய்வது ! அந்த அழகு பெற்றுக்கொண்ட பிறகு கூவிட வாராய்—என்றா கூறுகிறோம்? இல்லையல்லவா ! ஏதோ நிறம் கருமை எனினும், குரல் இனிமை—அதைச் சுவைப்போம் என்று இருக்கிறோம். அஃதேபோல, எல்லாத் திறமைகளும் குறைவற வந்து குவிந்தான பிறகுதான், 'அண்ணன்' என்று ஏற்றுக்கொள்வேன்—அதுவரையில் முடியாது என்று இலட்சக்கணக்கான தம்பிமார்கள் கூறிவிடவில்லை; கூறியிருந்தாலும் நான் என்ன செய்ய முடியும்? பெருமூச்சுடன் உலவிக்கொண்டிருந்திருப்பேன்.
காமராஜர் அதிகாலையில் எழுந்திருக்கிறாராம்—கனம் சுப்ரமணியம் கடலோரம் நடக்கிறாராம்—மாணிக்கவேலர் மரத்தடி படுக்கிறாராம்— இப்படி ஒவ்வொரு தலைவருக்கும் உள்ள பல சிறப்பு இயல்புகளைப் பலர், சுட்டிக் காட்டுவர். எல்லாத் தலைவர்களிடமும் உள்ள எல்லாச் சிறப்பு இயல்புகளும், ஒருங்கே அமையப் பெற்றாலொழிய, உன்னை என் 'அண்ணன்' என்று ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்றா கூறினீர்கள் ? இல்லையே! கூறியிருந்தால் என்ன செய்திருப்பேன்? நமக்கு இப்படிப்பட்ட அருமைத் தோழர்களைத் தம்பிகளாகப் பெறும் வாய்ப்பு இல்லாது போயிற்றே என்று மனம் குமுறி இருப்பேன். எதற்குச் சொல்கிறேன் என்றால், பாசமும் நேசமும் ஏற்பட்டால், திறமைகள் முற்றிலும் நிரம்பி இருக்கிறதா என்றுகூடக் கவனிக்கச் சொல்லாது; இருப்பதைக் கண்டு மகிழவைத்திடும்.