உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கொள்கையில் குழப்பமேன்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

89

முன்னேற்றக் கழகத்தின் தலைவரானதால், அவரது கதைகளுக்குக் கிடைக்கிற அமோகமான ஆதரவு, அவரது கட்சிக்கும் ஆதரவையும் வலிவையும் தேடித்தரக் கூடும் என்று சிலர் அஞ்சினர். இப்படிப்பட்டவர்களின் அச்சத்தைத் தவிர்ப்பதற்றாகவோ, என்னவோ தனிக்கைக் குழுவினர் தங்களது கத்தரிக்கோலைப் பதப்படுத்திக் கொண்டனர்." தம்பி ! இப்படி இவர் பார்லிமெண்டில் பேசியது கேட்டு. நான், சரி, கலைத் தொடர்பு, அவசியம்தானா இல்லையா என்ற சந்தேகம் தேவையில்லை. பாராளுமன்ற உறுப்பினரே, அது பாராட்டுதலுக்குரியது என்றார்—நாம் ஈடுபட்டால் தவறு இல்லை என்றுதானே எண்ணிக் கொள்வேன்;

எப்போது முதல் இவருக்கு, இப்படி ஒரு யோசனை கூறி, என்னை நல்வழிப் படுத்தும் அக்கறை ஏற்பட்டது என்பதே கூட எனக்குப் புரியவில்லை. இருவரும் சேர்ந்து ஒரு 'படம்' கூட வாங்கி, ஓட்டி நட்டப்பட்டிருக்கிறோம் !

பெரியார், சினிமாக்கட்சி என்று கூறியபோது, இவர் தான், மிகப் பலமாகத் தாக்கினவர். சினிமாவை விடு ! சிலம்பத்தை எடு! என்ற தத்துவ முழக்கத்தைக் கேட்டு, இடி இடியெனச் சிரித்தவர் இவர்.

இவருக்குத் திடீரென்று நான் கலைத் தொடர்பு கொள்ளலாகாது என்று எப்படித் தோன்றிற்று என்பதே புரிய வில்லை. மற்றொன்று, இவ்வளவிலும், ஊடுருவி நிற்கும் ஓர் விஷயத்தைக் கவனித்தாயா தம்பி ! அது ஒரு பயங்கரமான நிலையைக் காட்டுவதாக அமைந்திருக்கிறது.

இவருக்குத் திராவிடநாடுதான் சரியான திட்டம் என்று தோன்றும்; நாம் கேட்டு நடக்க வேண்டும். இவருக்குத் திராவிடநாடு கனவு என்று தோன்றும்; தமிழ்நாடு போதும் என்று தோன்றும்; உடனே நாம் அனைவரும் தலை அசைத்தபடி அவர் காட்டும் வழி நடக்க வேண்டும்.