பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

141

இந்த இளவட்டம் எல்லாம் அந்த மயக்குல போயி விழுந்துடுதுங்க. அதும் இந்த சினிமாதா ஊரக் கெடுக்குதுங்க. ஆம்புள், பொம்புள எல்லாம் போயி, வயித்துக்குச் சோறு இருக்கோ இல்லியோ போயி வுழுவுதுங்க...”

“எனக்கு இந்தப் பயிர்த் தொழில வுட மேன்மையானது ஒண்ணில்லன்னு நிச்சயமாருக்கு. எங்கப்பாரு காலத்திலோ, பாட்டன் காலத்திலோ, இந்தப் பூமி சர்க்கார் குடுத்திருந்திச்சாம். ஆனா, மேச்சாதிக்காரங்க, குடிமகன் வெள்ளாம பண்ணக் கூடாதுன்னு தடுத்தாங்களாம். நான் அந்தக் காலத்துல, குடியாத்தத்துல ஸ்கூல் படிச்சேன். பட்டாளத்துக்குப் போன. இந்தப் பூமிய எழுதிவுட்டு, மீட்டுக்கிட்டேன். எக்ஸ் சர்வீஸ் மேன்னு ஒரு பக்கம்... நாலு ஏகரா... சம்சாரம் சீக்குக்காரி. அதுக்காக மங்களுரில் இருந்திட்டிருந்தேன். அவ போன பெறகு, வந்திட்டே. செவந்தியம்மாளப் பாத்ததும், இவங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு. இவங்களுக்கு மட்டுமில்ல, சபிக்கப்பட்டதா நெனச்சிட்டிருக்கமே, பொம்புளப் புள்ளங்களுக்கே நல்ல காலம்னு தோணிச்சி...”

மனம் குதிபோட காபித் துளை ஏனத்தில் போட்டுப் பொங்கு நீரை ஊற்றுகிறாள். இதற்குள் வெளியே பல்குச்சியுடன் சென்றிருந்த புருசன் கிணற்றடியில் முகம் கழுவுவது புரிகிறது. பளபளவென்று தேய்த்த தவலைச் செம்பில் காபியை ஊற்றுகிறாள். இரண்டு தம்ளர்களுடன் வருகிறாள்.

“குடு. நான் கொண்டுட்டுப் போறே...”

முகத்தைத் துடைத்துக் கொள்கிறான். சீப்பால் முடியைத் தள்ளிக் கொள்கிறான். தேங்காய்ப் பூத்துவாலையைப் போட்டுக் கொண்டு காபியுடன் செல்கிறான்.

உள்ளுக்குள் இருக்கும் சிறுமை உணர்வை, மரியாதைப்பட்டவர் முன்னிலையில் காட்டமாட்டான். சாந்தி புருசன் முன் மிக மரியாதையாக நடப்பான். ஆனால் அவர்கள் அகன்ற பின் குத்தலாக ஏதேனும் மொழிவான். அவனுடைய சிறுமை உணர்வுகள் ஆழத்தில் பதிந்தவை. அவை அவளைக் கண்டதும் ஏதோ ஒர் உருவில் வெடிக்கும்.