பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/168

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

166

கோடுகளும் கோலங்களும்

“அப்பவடையும் சுட்டு வையுங்க!”

“அதென்னவோ, கடலையை வெவிச்சுத் திண்ணாத் தா ருசி. அதும் நெல்லுப்புழுக்கையில மூட்டக் கட்டிப் போட்டுட்டா, அந்த ருசி தனி...” மூக்காயிப் பாட்டியின் பேத்தி வந்திருக்கிறாள். இவள் கை சுத்தம் கிடையாது. தனியாகக் கடத்தி விடுமோ என்ற அச்சம் உண்டு.

சரவணன் நாகம்மாளின் மகனுடன் பச்சைக்கடலை பிடுங்குவதாகச் சொல்லிக் கொண்டு உடைத்து உடைத்து வயிற்றுக்குள் தள்ளுகிறார்கள். கடைவாய் வழி பால் ஒழுகுகிறது.

“டேய், பச்சைக் கடலை வகுத்தால புடுங்கிக்கும். வூட்டுக்குப் போங்க. வேவிச்சித்தார”

குவியலாகக் களத்து மேட்டில் கொண்டு வந்து குவித்தாயிற்று. பிடுங்கியவர்களுக்கெல்லாம் மரக்கால்களாகக் கடலையை அளந்து கொடுக்கிறாள்.

காக்கைகள் கருப்பாகச் சுத்தி வட்டமிடுகின்றன. நாயும்கூட அசந்து மறந்தால் எடுக்கும் பண்டம். வெயில் நாட்கள். இரண்டு நாட்கள் காய்ச்சல் போதும். இரவும் பகலுமாகக் காவல் இருக்க வேண்டும். பகல் பொழுதுக்குச் செவந்தியும் அம்மாவும் மாறி மாறிக் காவல் இருப்பார்கள்...

இரண்டு இரவுகள்... ரங்கன் கயிற்றுக் கட்டிலைப் போட்டுக் கொண்டு படுத்துக்கொள்ள வேண்டும்.

இப்போதெல்லாம் இவளுக்கு இரண்டு வயல்களில் வேலை இருப்பதனால் வீட்டில் அதிக நேரம் தங்கவே நேரம் இல்லை. சரோ இல்லாததால், வீட்டிலேயே வேலை இல்லைபோல் ஒரு வெறுமை.

ஏழு மணியோடு வீட்டில் வந்து கிணற்றடியில் இலைத் தூசு, மண், புழுதி போகத் தண்ணீரிறைத்துக் குளிக்கிறாள். ரங்கன் வருகிறான்.

“குளிக்கிறியா?”