பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/172

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

170

கோடுகளும் கோலங்களும்

பஸ்ஸில போயி நம்ம குழந்தையக் கூட்டிட்டு வாங்க. நாம எப்படியும் மேல படிக்க வச்சிடுவம்...”

“ஸ்காலர்ஷிப் கிடைக்கும்ன்னு சொல்றாங்க. நா. இத இப்பவே போறேன்...”

செவந்தியின் மனதில், தான்வா ஆபீசர் மேடம் போல் சரோ வரவேண்டும் என்ற கனவு உயிர்க்கிறது. அவங்களைப்போல் மண்ணுடன் ஒட்டி தாய்ப்பாசமாக இருக்கும்படியான ஒரு படிப்பைப் படிக்கலாமே?

அவன் காலை பஸ்ஸைப் பிடித்துக் கொண்டு மதுரைக்குச் செல்கிறான். செவந்தி அன்று மாலை திரிகையில் பயிறை எண்ணெய் தடவி வைத்துக் கொண்டு உடைத்துக்கொண்டிருக்கிறாள்.

“அம்மா அம்மா! அக்கா வந்திடிச்சி!” என்று சரவணன் ஒடி வருகிறான்.

“அப்பா காலமதான போனாங்க? எப்படி? மாமன் கூட்டி வந்திட்டானா?...”

சரோசா கையில் அப்பா வாங்கிக் கொடுத்திருந்த பெட்டியுடன் விரைந்து வருகிறாள். பெட்டி கீழே நழுவுகிறது.

அம்மாவின் தோளில் தலை சாய்த்து விம்முகிறாள்.

“சரோ... சரோ என்னம்மா? என்னாச்சி? அப்பா காலம போயிருக்காங்க, நீ பஸ்டா பாஸ் பண்ணியிருக்கேன்னு பேப்பர்லல்லாம் வந்திச்சி, போட்டோ கேட்டு வந்தாங்க. எங்களுக்கெல்லாம் பெருமையாக இருக்கு. கடலக்கா நல்லா வெளஞ்சிருக்கு... ஏங்கண்ணு, சந்தோசமா இருக்கறப்ப ஏ அழுவுற? சீ கண்ணத் தொட. நீ மேல பெரிய படிப்பு படி. அந்தத் தான்வா மேடம் போல படிக்கணும். உன்ன யாரு கூப்பிட்டு வந்தாங்க? மாமன் வரலியா?” இத்தனைக் கேள்விக்கும் விசும்பலே விடையாக இருக்கிறது. இவளுக்கு இனம் தெரியாத கலவரம் வயிற்றைக்கலக்குகிறது. ஏதேனும் ஆயிட்டதா? எதானும் நடக்கக் கூடாதது நடந்துவிட்டதா? கடவுளே!