பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

கோடுகளும் கோலங்களும்

பாடு பெண் பாடு என்று உழைத்தவள் சின்னம்மாதான். அம்மாவுக்கும் அவளுக்கும் ஆறேழு வயசோ மேலேயோ வித்தியாசமிருக்கும்.

பாட்டி சாகும் போது, சின்னாத்தாளுக்கு ஒரு வயசோ ஒன்றரை வயசோதானாம். அம்மாவுக்கும், சின்னம்மாவுக்கும் இடையில் மூன்றோ, நான்கோ குறைப் பிரசவங்களும் ஒரு முழுப் பிள்ளையும் வந்து நலிந்து போன பிறகு இவள் பிறந்தாளாம்.

பாட்டன் அந்தக் காலத்தில் வேறு கல்யாணம் கட்டாமல் இரண்டையும் தாயுமாக நின்று வளர்த்தாராம். சின்னம்மாவைத் தோளில் சுமந்து கொண்டு கழனிக்கரைக்குப் போவாராம்.

பாட்டனாரைச் செவந்திக்குத் தெரியும். அவளைத் தோள் மீது சுமந்து கொண்டு காஞ்சிபுரம் தேர்திருவிழாவுக்குக் கூட்டிச் சென்றிருக்கிறார். பொரி கடலை மிட்டாய் வாங்கித் தந்திருக்கிறார். யானை காட்டி, அதன் துதிக்கையை தலையில் வைத்து ஆசி வழங்கப் பண்ணுவார். காசு கொடுக்கச் சொல்லுவார். பெருமாள் கோயிலில் பல்லி தொட்டுக் கும்பிடத்தூக்கிப் பிடிப்பார்.

அவளுக்கு நினைவு தெரிந்த வயசில்தான் சின்னம்மா ராசாத்திக்குக் கல்யாணம் நடந்தது. கோயிலில்தான் நடந்தது. பெரிய பெரிய அதிரசம் பணியாரம் சுட்டு நடுக்கூடத்தில் வைத்திருந்தார்கள். சின்னம்மா அம்மாவைப் போல் உயரமில்லை. வெளுப்புமில்லை. ஆனால் குருவி போல் சுறுசுறுப்பாக உட்கார்ந்து செவந்தி பார்த்ததாக நினைவில்லை. ஆடு வளர்த்தாள். கோழி வளர்த்தாள். பாட்டன் சந்தையில் கொண்டு கோழி விற்றோ, ஆடு விற்றோ அவளுக்குக் காலில் முத்துக் கொலுசு வாங்கி வந்தது நினைவிருக்கிறது.

செவந்தியின் மீது சின்னம்மாவுக்கு நிறைய ஆசை. அவள் பள்ளிக்கூடம் போக இரட்டைப்பின்னல் போட்டுக் கட்டி விடுவாள். முருகன் அம்மா பிள்ளை. அவனுக்குச் சின்னம்மாவிடம் ஒட்டுதல் இல்லை. இவள் ஸி.எஸ்.ஐ. பள்ளியில்