பக்கம்:கோயில் மணி.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நிறைவு

105

இப்போது அம்மா இல்லை. அவள் இறந்து மூன்று ஆண்டுகள் ஆயின. அவளுக்கு வயசு முப்பத்தைந்து. அம்மா இருந்த வரையில் தனக்கு வயசாகி வருகிறது என்ற நினைவே அவளுக்குத் தோன்றவில்லை. வீடு இல்லையானால் பள்ளிக்கூடம், பள்ளிக்கூடம் இல்லையானால் வீடு—இப்படி அவள் போது கழிந்து கொண்டிருந்தது.

ஆனால் அம்மா போன பிறகு இந்த மூன்று ஆண்டுகள் எவ்வளவு நீண்டு வளர்ந்தன. வீடு வெறிச்சோடிக் கிடந்தது. யாரோ ஒரு கிழவியைக் சமையல் செய்ய அமர்த்தியிருந்தாள். அவள் அம்மா ஆவாளா? சமைத்துச் சாப்பாடு போட்டுவிட்டு அவள் எங்கேயாவது படுத்துத் துங்குவாள். வேலைக்காரப் பையன்தான் கூப்பிட்ட குரலுக்கு வந்து நிற்பான்.

அம்மா இருந்தபோது அவள் அருமை தெரியவில்லை. இப்போதுதான் அது தெரிந்தது. அவள் கல்யாணம் பண்ணிக்கொள்ளும்படி, குறிப்பாகவும் வெளிப்படையாகவும், சாந்தமாகவும் கோபமாகவும், கெஞ்சியும் மிஞ்சியும் சொன்ன வார்த்தைகளெல்லாம் ஒன்றன்பின் ஒன்றாய் நினைவுக்கு வந்துகொண்டே இருந்தன. ‘அம்மா சொன்னபடி கேளாமல் போனோமே!’ என்ற எண்ணங்கூடத் தோன்றியது.

இத்தனை, காலம் அந்தப் பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக இருந்ததனால், வெளியிலே எங்காவது சென்றால் அவளிடம் படித்த பெண்கள் பலர் கண்ணிற் பட்டார்கள். பெரும்பாலோர் குடியும் குடித்தனமுமாக வாழ்வதையே அவள் கண்டாள். இதோ நேற்று. மங்கையர்க்கரசி கையில் ஐந்து வயசுக் குழந்தையை அழைத்துக்கொண்டு வந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/111&oldid=1384096" இலிருந்து மீள்விக்கப்பட்டது