பக்கம்:கோயில் மணி.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

124

கோயில் மணி

என்று பார்க்கிறேன். இது பழைய பட்டணம் இல்லை அம்மா: சூதுக்காரப் பாவிகளுக்குத்தான் இங்கே செல்லுபடி ஆகும்.”

அவன் மனம் நொந்து பேசினான்.

“ஆண் பிள்ளை வீட்டில் குந்திக்கிடக்கப் பெண் பிள்ளை சம்பாதித்து எவ்வளவு நாளைக்குத் தாங்கமுடியும்? மூட்டை தூக்கியாவது பிழைக்கலாம் என்றால் அதற்கும் வக்கில்லை. என்னைக் கண்டாலே அவர்களுக்குப் பரிகாசமாக இருக்கிறது. உங்களை வந்து பார்க்கவேண்டும் என்ற ஆசைதான். ஆனால் இந்தக் கோலத்தோடு வர வெட்கமாக இருந்தது.”

என்னடா நீ இப்படிப் பேசுகிறாய்? அப்போது எல்லாம் எவ்வளவு சுறுசுறுப்பாக இருந்தாய்!

“அதெல்லாம் பழைய கதை அம்மா. வீட்டில் நானே கஞ்சி காய்ச்சுகிறேன். பெண் பிள்ளை ஆண் பிள்ளையைப் போலச் சம்பாதிக்கிறாள். ஆண் பிள்ளை பெண் பிள்ளையைப்போலக் கஞ்சிகாய்ச்சுகிறேன்.”

“ஏன், செங்கமலம் சமைக்க மாட்டாளா?”

“அவள் நன்றாகச் சமைப்பாள்; நான்தான் விடுகிறதில்லை. அவள்தான் காலை நேரம் முழுவதும் எங்கே மலிவாகப் பூக்கிடைக்கிறதென்று சுற்றி வாங்கி வருகிறாளே மாலையில் பூவிற்கப் போகிறாள். வீட்டிலே பூக்கட்டுகிறது, குழந்தைகளைப் பார்த்துக்கொள்கிறது, இதெல்லாம் வேறு இருக்கிறது.”'

“சமைப்பது பெண்பிள்ளைகளுக்கு ஒரு பாரமா?”

“அதில் ஓர் இரகசியம் இருக்கிறதம்மா. அதை நான் சொல்லமாட்டேன். ஆனாலும் நீங்கள் தெய்வம் போல; உங்களிடம் சொல்லாமல் வேறு யாரிடம் சொல்லுவது? அவளுக்கு இது தெரிய வேண்டாம்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/130&oldid=1384152" இலிருந்து மீள்விக்கப்பட்டது