பக்கம்:கோயில் மணி.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

128

கோயில் மணி

பரிதாபமாக இருந்தது. ஆனால் அதை மாற்ற நான் யார்?

நாராயணன் வஞ்சகம் இல்லாமல் வேலை செய்தான். பூச்செடிகளை நன்றாகப் பாதுகாத்தான். புதிய செடிகளை வைத்தான்.

எனக்கு ஒரு நாள் ஒரு யோசனை தோன்றியது. பணமாக நமக்குக் கொடுக்க முடியாது. வேறு வகையில் அவனுக்கு உதவி செய்தால் என்ன என்று எண்ணினேன். எங்கள் வீட்டில் கிடைக்கிற பூவில் கொஞ்சம் செங்கமலத்துக்கு இனாமாகக் கொடுத்தால், அவள் அதைக் கட்டி விற்று ஏதோ கொஞ்சம் லாபம் அடைவாளே என்று எண்ணினேன். ஒரு நாள் ஒரு சிறு வட்டிலில் பூவை எடுத்து அவனிடம் கொடுத்து, என் கருத்தைச் சொன்னேன்.

“அம்மா, என்னை மன்னிக்க வேண்டும். உங்கள் தெய்வத்தை வஞ்சித்து எங்களுக்குத் தர்மம் செய்ய வேண்டாம். இப்படிச் செய்தால் நாளைக்கு என் மனசில் சபலம் தட்டும். உங்களுக்குத் தெரியாமல் பூவை விற்கும் ஆசை உண்டாகலாம்.”

“என்ன அப்படிச் சொல்கிறாய்? உன்னிடத்தில் எனக்குப் பரிபூரண நம்பிக்கை உண்டு.”

“நீங்கள் எனக்கு வேலை கொடுத்ததே போதும் அம்மா, இந்தத் தானம் வேண்டாம்” என்று சொல்லிவிட்டான். அவனுடைய உள்ளக்கிடக்கை எனக்கு விளங்கவே இல்லை.

ஒரு நாள் மத்தியான்ன வேளையில் செங்கமலம் வந்தாள். “எங்கே இந்த நேரத்தில் வந்தாய்” என்று கேட்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/134&oldid=1384203" இலிருந்து மீள்விக்கப்பட்டது