பக்கம்:கோயில் மணி.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

150

கோயில் மணி

பிரித்துப் பார்த்தபோது, உள்ளே சிறு துணுக்கு ஒன்றும் மற்றோர் உறையும் இருந்தன. துணுக்கில், “இன்ஸ்பெக்டர் அவர்களுக்கு, வணக்கம். இதனுடன் உள்ள கடிதத்தை மாஜிஸ்டிரேட் ஐயா அவர்களிடம் கொடுக்க வேண்டும்” என்று இருந்தது. மாஜிஸ்டிரேட் வாங்கி உறையைக் கிழித்து உள் இருந்ததைப் படித்தார்.

“புண்ணிய மூர்த்தியாகிய திரு நடராஜன் அவர்களுக்கு அநேக கோடி நமஸ்காரங்கள். மகாபாவியாகிய நான் தங்கள் பெயரைச் சொல்லி எழுதுவதற்குத் தகுதியற்றவன். ஆனாலும் அதை மந்திரத்தைப்போல உச்சரித்துக் கொண்டு எழுதுகிறேன். எனக்காக அபராதம் செலுத்தினதை அறிந்தேன். இதைத் திருப்பிச் செலுத்துவதற்காகவாவது ஆண்டவன் என்னை உயிரோடு வைத்திருப்பான் என்று எண்ணுகிறேன். இதைத் தாங்கள் செலுத்தாமல் இருந்திருந்தால் நான் உயிரை விட்டிருப்பேன். தங்களுக்குக் கடன்படும்படி செய்துவிட்டீர்கள். தங்கள் முகத்தில் ஒரு கணம் விழிப்பதற்குள் என் உயிர் ஒரு முறை செத்துப் பிறந்தது. ஆனால் தங்கள் முகத்தைப் பார்த்தபிறகு, இனி மானமாகப் பிழைக்கவேண்டும் என்ற உறுதி வந்து விட்டது. தாங்கள் தீர்ப்பில் சொன்னபடி இதுதான் நான் செய்த முதல் குற்றம். இதுவே முடிவான குற்றமாக இருக்கத் தாங்கள் ஆசீர் வாதம் செய்யுங்கள்; தெய்வத்தினிடம் எனக்காக மன்றாடுங்கள். அன்று — அதை நினைக்கவோ, நினைப்பூட்டவோ எனக்குத் தகுதியில்லை; ஆனாலும் மனம் கேட்கமாட்டேனென்கிறது — அன்று, என் சிநேகிதன் நடராஜன் நெற்றித். திருநீற்றைப் பரிகாசம் பண்ணினேன். இன்று அந்தக் காட்சியே என்னைத் திருத்தி இருக்கிறது. இன்று முதல் எனக்கு வேறு தெய்வம் இல்லை. தாங்களே தெய்வம். தங்களைப் பார்க்காமல் போவதற்கு மன்னிக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/156&oldid=1384251" இலிருந்து மீள்விக்கப்பட்டது