பக்கம்:கோயில் மணி.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வேப்ப மரம்

67

நேர்ந்துகொண்டார். நல்ல வேளை! குழந்தைக்கு அம்மை கடுமையாக இல்லை. பத்து நாட்கள் கழித்துத் தலைக்குத் தண்ணீர் விட்டார்கள். முத்துசாமி ஆறுதலாகப் பெருமூச்சு விட்டார்.

ன்று மாலே அவர் தம் அறையில் உட்கார்ந்திருந்தார். வேப்பமரத்தில் இலையே இல்லை; கொழுந்துகள் சிறிது சிறிதாகத் தோன்றியிருந்தன. ‘நம்முடைய வீட்டில் வேப்பிலை வேண்டியிருந்தபோது நம் மரம் உதவவில்லையே!’ என்ற எண்ணம் உண்டாயிற்று. அப்போது அவர் மனைவி வந்து நின்றாள்; “சமாசாரம் கேட்டீர்களா ?” என்றாள்.

“உனக்கு என்ன சமாசாரத்துக்கு? உன் சமாசாரங்களை வைத்துக்கொண்டு ஒரு தினப் பத்திரிகையே நடத்தி விடலாம். உனக்குத்தான் வேலம்மாள் என்ற பிரதான நிருபர் வேறு இருக்கிறாளே!” என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.

“ஆமாம்; வேலம்மாள் தான் சொன்னாள். குழந்தைக்கு அம்மை பூட்டி யிருந்தபோது வேப்பிலைக்கு என்ன செய்தேன் தெரியுமோ ?”

“ஆமாம், வேப்பமரத்தை மொட்டை யடித்து விட்டு ஊராரிடம் யாசகம் செய்திருப்பாய்.”

“வேலம்மாளிடம் சொன்னேன்; அவள்தான் வாங்கி வந்தாள். அவளுக்கு நாள் தவறாமல் சின்னப்பன்தான் கொண்டுவந்து தந்தானாம். நம் வீட்டில் அம்மை பூட்டியிருக்கிறதென்று தெரிந்து விசாரித்திருக்கிறான். வேலம்மாள் சொல்லியிருக்கிறாள். அவனே சிரத்தையாக ஒவ்வொரு நாளும் கொண்டு வந்து தந்தானாம்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/73&oldid=1383936" இலிருந்து மீள்விக்கப்பட்டது