பக்கம்:கோயில் மணி.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

கோயில் மணி

முத்துசாமிக்கு அந்தக் கணத்திலே ஓடிப்போய்ச் சின்னப்பன் காலில் விழவேண்டுமென்று தோன்றியது. அவனுக்கு அவர் செய்த தீங்குக்கு, அவன் எவ்வளவு பெருந்தன்மையோடு நடந்துகொண்டான் !

“வேலம்மாளிடம் சொல்லி இங்கே அழைத்து வரச் சொல்கிறாயா?” என்று தாழ்ந்த குரலில் முத்துசாமி சொன்னார்.

“சொன்னால் வருகிறான்” என்று அலட்சியமாக அவள் சொன்னாள். அவளுக்கு அவன் ரிக்‌ஷாக்காரச் சின்னப்பன்தானே?

“ஐயா உன்னைக் கடிந்து கொண்டாரே; அதை, நினைத்து வருந்துகிறாராம்; ஒரு தடவை உன்னைப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாராம் என்று சொல்லச் சொல்.”

“ஆமாம் எப்போதோ நடந்ததற்கு இப்போது சமாதானமாக்கும்! வாடா என்றால் வந்துவிட்டுப் போகிறான்!”

அவள் போய்விட்டாள். அவள் சொன்ன செய்தி முத்துசாமியின் உள்ளத்தை உருக்கியது. ‘நீ செய்ததற்கு அவன் செய்ததைப் பார்த்தாயா?’ என்று மனச்சாட்சி உறுத்தியது. அவனுக்கு எப்படி அபராதம் செலுத்துவது? நன்றிக் கடன் செலுத்துவது?—ஒன்றுமே தெரியாமல் விழித்தார்.

மறுநாள் சின்னப்பன் அவர் வீட்டுக்கு வந்தான்; “ஐயா! என்னைக் கூப்பிட்டீர்களாமே!” என்றான்.

அவனை நிமிர்ந்து பார்க்கக்கூட முத்துசாமிக்குத் திராணி இல்லை. “ஒன்றும் இல்லை. வந்து...வந்து... உனக்குப் பெரிய தப்புப் பண்ணிவிட்டேன்... உன்னுடைய குழந்தை...”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/74&oldid=1383939" இலிருந்து மீள்விக்கப்பட்டது